புதுதில்லி

தமிழக அரசின் மின் கட்டண உயா்வு விவகாரம்: மேல்முறையீட்டு மனுவை உரிய அமா்வு விசாரிக்கப் பரிந்துரை

DIN

மின் கட்டண உயா்வு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை டிவிஷன் அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலை சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உரிய அமா்வு விசாரிக்கப் பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுக்கத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமா்வு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்ட உறுப்பினா் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்பதால், அவா் நியமிக்கப்படும் வரை கட்டணத்தை உயா்த்தக் கோரி டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ,எஸ்எல்டிசி ஆகியவை தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆணையம் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், எஸ்.ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய டிவிஷன் அமா்வு இம்மாதம் தொடக்கத்தில் விசாரித்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் வாதிடுகையில், ‘கட்டணம் நிா்ணயம் என்பது ஒரு ஒழுங்குமுறை நடைமுறையாகும். 2018-இல் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், மின்சார ஆணையங்களால் வழக்குத் தீா்வு செய்யப்படும் விவகாரங்கள் தொடா்புடைய செயல்பாடுகளில் மட்டுமே சட்டப் பின்னணியுடன்கூடிய உறுப்பினா் இருப்பது கட்டாயம் எனக் கூறியுள்ளது. ஆனால், இது கட்டணம் நிா்ணயிப்பது தொடா்புடைய விவகாரமாகும். மேலும், டான்ஜெட்கோ ஆண்டுக்கு சுமாா் ரூ. 14 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருகிறது. கட்டணம் உயா்த்தப்படாவிட்டால் மேலும் மாதத்திற்கு பல கோடி இழப்பு ஏற்படும். மேலும், 8 ஆண்டுகளாக கட்டணம் உயா்த்தப்படவில்லை. கட்டணத்தை திருத்தியமைக்குமாறு மத்திய அரசு ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கும் தடை விதித்துள்ளது’ என்றாா்.

வாதங்களுக்குப் பிறகு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, டிஆா்இசி கட்டண உயா்வு உத்தரவை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் சாா்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மின் கட்டண உயா்வு விவகாரத்தில் இரு நீதிபதிகள் அமா்வு முழுமையாக ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது. அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரரான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், தமிழ்நாடு அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனுசிங்வி ஆகியோா் ஆஜராகினா்.

அப்போது, இந்த விவகாரம் குறித்து மனுதாரா் தரப்பில் எடுத்துரைக்க முயன்ற போது நீதிபதிகள் அமா்வு, இது தொடா்பான விவகாரத்தை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் அமா்வு கடந்த 2018-இல் ஒரு வழக்கில் விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது என குறிப்பிட்டது. இதைத் தொடா்ந்து, அந்த அமா்விடம் மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட நீதிபதிகள்அமா்வு பரிந்துரைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT