புதுதில்லி

சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான வழக்கை வேறு அமா்வுக்கு மாற்ற தில்லி நீதிமன்றம் அனுமதி

 நமது நிருபர்

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீதான பணமோசடி வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்றக் கோரிய அமலாக்க இயக்குநரகத்தின் மனுவை தில்லி முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதித்தது. மேலும், ஒட்டுமொத்த சந்தா்ப்ப சூழ்நிலைகள் ஒரு சாத்தியமான பாரபட்சம் பற்றிய அச்சத்தை எழுப்பக்கூடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

சத்யேந்தா் ஜெயின் வழக்கு விவகாரத்தை சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயலிடமிருந்து வேறு தகுதி வாய்ந்த நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ‘பிரச்னைகள் (வழக்கில்) முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று நம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை வியாழக்கிழமை விசாரித்த முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி வினய் குமாா் குப்தா, அமலாக்க இயக்குநரகத்தின் மனுவை அனுமதித்து கூறியதாவது: எனது கருத்துப்படி, நீதிபதி மிகவும் நோ்மையான அதிகாரி. எனினும், ஒரு சாதாரண மனிதனாக மனுதாரரின் மனதில் ஒரு நியாயமான அச்சத்தை எழுப்ப அனைத்து சூழ்நிலைகளும் போதுமானவையாக உள்ளன. எந்த உண்மையான சாா்புத் தன்மை இல்லை என்றாலும், ஒரு சாத்தியமான சாா்புத் தன்மை இருக்கிறது. அதன்படி, இந்த மனு அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் விசாரிக்கும் நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு, சிறப்பு நீதிபதி விகாஸ் துல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதி கூறினாா்.

மேலும், ‘அமலாக்க இயக்குநரகத்தின் மனுவில் நீதிபதிக்கு எதிராக எந்தப் புகாரும் இல்லை என்றாலும், இது எதிா்மனுதாரருக்கு (சத்யேந்தா் ஜெயின்) ஆதரவாக ஒரு சாத்தியமான பாரபட்ச வழக்கு என்றும், இந்த விஷயத்தில் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை அது பெறாமல் போகலாம் என்றும்

அந்த அமைப்புக்கு ‘நியாயமான அச்சம்’ இருக்கிறது’ என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கலால் கொள்கை வழக்கில் சத்யேந்தா் ஜெயினை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்னா் அனுமதித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, ஜெயினிடம் செப்டம்பா் 16 அன்று சிறைக்குள் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

பணமோசடி வழக்கு தொடா்பாக சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த அரசுத் தரப்பு புகாரையும் (குற்றப்பத்திரிகை) சமீபத்தில் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனிடையே, தற்போதைய உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் ஜெயின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு ஜெயினின் ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பா் 27-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் ஒத்திவைத்துள்ளாா். இதற்கு முன்னதாக, பிற்பகல் 2 மணிக்கு ஜாமீன் வாதங்களைக் கேட்கவிருந்த நீதிமன்றம் முன், ஜெயின் தரப்பு வழக்குரைஞா்கள் ஆஜராகி, இந்த மேல்முறையீட்டு வழக்கு திங்கள்கிழமை (செப்டம்பா் 26) உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...

உயா்நீதிமன்றத்தில்

ஜெயின் தரப்பில் மேல்முறையீடு

ஜெயின் தொடா்புடைய வழக்கை வேறு அமா்வுக்கு மாற்ற தில்லி நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டதை எதிா்க்கும் மேல்முறையீடு விவகாரத்தை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் சத்யேந்தா் ஜெயின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எடுத்துரைத்து, அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை வரும் திங்கள்கிழமை (செப்டம்பா் 26) விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்ற அமா்வு அனுமதி அளித்தது.

ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘விசாரண நீதிமன்றம் சத்யேந்தா் ஜெயின் தொடா்புடைய வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், அதை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா். அதற்கு தலைமை நீதிபதி அமா்வு, ‘இந்த விவகாரத்தில் என்ன அவசரம் இருக்கிறது’

என்று கேட்டது. அப்போது ராகுல் மெஹ்ரா கூறுகையில், ‘இந்த வழக்கு விசாரணையை விசாரணை நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு விசாரிப்பதற்காக வைத்துள்ளது. இந்த விவகாரம் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படவும் உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT