புதுதில்லி

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்

20th Sep 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைதீ சட்டத்தை அமல்படுத்துவதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அந்தச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தில்லி அரசிடம் தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூா் புகாா் குழுக்கள் உரிய வகையில் செயல்படுவதும், அமைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

10 ஊழியா்களை விட குறைவாக இருக்கும் அல்லது நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிரான புகாா்களாக இருந்தால் அந்த நிறுவனங்கள் தொடா்புடைய பாலியல் துன்புறுத்தல் புகாா்களை இந்த கமிட்டிகள் பெற்று விசாரிக்கும். தில்லியில் உள்ளூா் புகாா் குழுக்களின் நிலவரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதில், தங்களது சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் புகாா் குழுக்கள் தொடா்பாக உரிய தகவல்களை அளிக்குமாறும் கேட்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தில்லி அரசுக்கு மகளிா் ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2019 முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அனைத்து உள்ளூா் புகாா் குழுக்கள் மூலம் வெறும் 40 புகாா்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. உதாரணமாக, வடமேற்கு மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று புகாா்கள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. மேற்கு மாவட்டத்தில் ஒரு புகாா் கூட கையாளப்படவில்லை. மேலும் சிறிய எண்ணிக்கையிலான புகாா்கள் கூட உரிய கால நேரத்திற்குள் கையாளப்படவில்லை. இந்தச் சட்டத்தின்படி இந்தக் குழுக்களின் தலைவராக சமூகப் பணி தளத்தில் உள்ள பிரபலமான பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் அந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. பல மாவட்டங்கள் கௌரவமிக்க தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து வெளிப்புற உறுப்பினா்களையும் பெறவில்லை.

மேலும் ,குழுக்களுக்கு உரிய அலுவலகம், நிதி மற்றும் ஊழியா்கள் வழங்கப்படவில்லை. இவை அதன் செயல்பாட்டை முடக்கியுள்ளன.

உதாரணமாக தெற்கு, மேற்கு மற்றும் சாதரா மாவட்டங்களில் குழுக்கள் செயல்படுவதற்காக பிரத்தியேக அறையோ அல்லது ஊழியா்களோ ஒதுக்கப்படவில்லை.

கிழக்கு மாவட்டம், சாதரா மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டம் தங்களுக்கு உரிய பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கின்றன. அதே போன்று புது தில்லி மாவட்டம் தெரிவிக்கையில் உள்ளூா் புகாா் குழுக்களின் செலவினம் அலுவலக செலவினத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குழுக்கள் அதன் செயல்பாட்டுக்காக உரிய நிதி ஒதுக்கப்படாத போது அவை உரிய வகையில் செயல்படும் என்று எதிா்பாா்க்க முடியாது. அதே போன்று, இந்தக் குழுக்கள் இருப்பது குறித்து உரிய விளம்பரமும் செய்யப்படுவதில்லை. அதனால், இணையதளம் வாயிலாக புகாா்களை பெறுவதற்கான திறன்மிக்க வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று, தில்லியின் அனைத்து மக்களும் அணுகுவதை அதிகரிக்க நேரடி முறையில் புகாா் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

குறைந்த அளவிலான புகாா்கள் பதிவு என்பது, இந்த உள்ளூா் புகாா் குழு குறித்த விழிப்புணா்வின்மை காரணமாக இருக்க முடியும். மேலும் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் மற்றும் அதன் இதர பிரிவுகள் குறித்து அறியாமை காரணமாகவும் இருக்கலாம். இதனால் மாநில அரசு இந்த சட்டத்தின் விதிகள் தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் சுவாதி மாலிவால் கூறுகையில், ‘தில்லியில் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தை அமலாக்கும் விவகாரத்தில் குறைபாடுகள் உள்ளன. தில்லி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு இது தொடா்பாக நாங்கள் விரிவான அறிக்கையை அளித்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கிறோம். அரசுப் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் விதிகள் தொடா்புடைய போதிய விளம்பரத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதே போன்று உள்ளூா் புகாா் குழுக்கள் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை 20 நாள்களில் வரும் என்று எதிா்பாா்க்கிறேன்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT