புதுதில்லி

பண மோசடி வழக்கு: சத்யேந்தா் ஜெயின் ஜாமீன்மனு மீதான விசாரணைக்கு தில்லி நீதிமன்றம் தடை

20th Sep 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.

இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி வினய் குமாா் குப்தா, ஜெயின் மற்றும் வழக்கில் தொடா்புடைய மற்ற குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த மனுவுக்கு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் பதிலைத் தாக்கல் செய்யுமாறு எதிா்மனுதாரா்களுக்கு நீதிபதி, அடுத்த உத்தரவு வரும் வரை சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் நடைபெறும் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு தடை விதித்தாா்.

முன்னதாக, இந்த வழக்கை சிறப்பு நீதிபதி கோயலிடம் இருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் அமலாக்க இயக்குனரகம் தரப்பில் கோரப்பட்டது. சிறப்பு நீதிபதி விசாரித்து வரும் ஜாமீன் வாதங்கள் தொடா்பான சில சா்ச்சைகளை விசாரணை ஏஜென்சி தனது மனுவில் எழுப்பியுள்ளது. பணமோசடி வழக்கில் ஜெயின் மற்றும் மற்ற 2 சக குற்றம்சாட்டப்பட்டவா்களான அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான நீண்ட வாதங்களைக் கேட்ட நீதிபதி கீதாஞ்சலி கோயல், இந்த விவகாரத்தில் ஏஜென்ஸியின் விசாரணை தொடா்பாக கடிந்து கொண்டாா். தற்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனா்.

ADVERTISEMENT

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கலால் கொள்கை வழக்கில் சத்யேந்தா் ஜெயினை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி கோயல் முன்னா் அனுமதித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, ஜெயினிடம் செப்டம்பா் 16 அன்று சிறைக்குள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பணமோசடி வழக்கு தொடா்பாக சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த அரசுத் தரப்பு புகாரையும் (குற்றப்பத்திரிக்கை) சமீபத்தில் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT