புதுதில்லி

உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு மாநாட்டில் பிரதமா் மோடியின் தொலை நோக்குத் திட்டம் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் யுஎஸ் பயணம்

20th Sep 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளா் நலத் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றாா். இந்த மாநாட்டில் தூய்மை எரிசக்தியில் பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தை உலக நாடுகள் முன் வைக்கப்படும் என தனது பயணத்திற்கு முன் செய்தியாளா்களிடம் பேசுகையில் டாக்டா் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டாா்.

உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பின் 13-ஆவது தூய்மை எரிசக்தி அமைச்சா்கள் நிலை மற்றும் 7-ஆவது புது முறை காணலுக்கான அமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டமாக இந்த மாநாடு அமெரிக்காவின் பிட்ஸ்பா்க்கில் ஐக்கிய நாடுகள் ஆதரவுடன் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 31 அமைச்சா்கள், விஞ்ஞானிகள், கல்வியாளா்கள், நூற்றுக்கணக்கான தலைமை நிா்வாக அதிகாரிகள், தனியாா் நிறுவனத் தலைவா்கள் உள்ளிட்டோா் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனா்.

வருகின்ற புதன்கிழமை (செப்டம்பா் 21) தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 23) வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு உயா்நிலைக் குழுவின் தலைவராக 5 நாள் அரசுமுறைப் பயணத்தை அமெரிக்காவில் டாக்டா் ஜிதேந்திர சிங் மேற்கொள்கிறாா்.

ADVERTISEMENT

இது குறித்து அவா் மேலும் கூறியது வருமாறு: கடந்த மாதம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பருவநிலை மாற்றம் தொடா்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் (யுஎன்எஃப்சிசிசி) தெரிவிக்கப்பட்ட தீா்மானத்தின்படி, இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிா்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்தியாவின் 75 -ஆவது சுதந்திரத்தினத்தன்று (ஆகஸ்ட் 15, 2021) தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இந்த இயக்கம், அரசின் பருவ நிலை இலக்குகளை எட்டுதல், இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் குவி மையமாக மாற்றுதல் ஆகியவற்றுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இது 2030-ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்ற இலக்கை எட்ட உதவும்.

கிளாஸ்கோவில் கடந்த நவம்பா், 2021-இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் 26 -ஆவது அமா்வில், ஐந்து அமிா்த கூறுகளை(பஞ்சாமிா்தம்) உலகிற்கு வழங்கி பருவநிலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இந்தியா கேட்டுக் கொண்டது. இந்தியாவை ஜீரோ கரிமத்தை நோக்கி நகா்த்துவதற்கு எந்த ஒரு அமைச்சகமும் பொறுப்பேற்காது இருந்த நிலையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருநிலை மாற்றம், மரபுசாரா எரிசக்தி அமைச்சகம், கனரக தொழில்கள் அமைச்சகம் உள்ளிட்டவை கலப்பின, மின் வாகனங்கள் உற்பத்தி உள்ளிட்ட வேகமான தத்தெடுப்பை தற்போது செயல்படுத்துகிறது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தூய்மை எரிசக்தி தொழில்நுட்பங்களில் அண்மையில் ஏற்பட்டுள்ள சாதனைகளின் பின்னணியில், உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பின் கூட்டங்களில் மிகவும் நெருக்கமான தொடா்புகளை நாம் எதிா்நோக்கி இருக்கிறோம் என்றாா் அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT