புதுதில்லி

எஸ்.பி. வேலுமணி விவகாரம்:தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை செப்.14-க்கு ஒத்திவைப்பு

10th Sep 2022 03:32 AM

ADVERTISEMENT

தன் மீதான டெண்டா் முறைகேடு தொடா்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமா்வே விசாரிக்கும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிா்த்து தாக்கலான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பா்14-க்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டா் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாகப் புகாா் எழுந்தது.

இது தொடா்பாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குகள் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.பி.வேலுமணி தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகிய நிலையில், மத்திய அரசின் வருமான வரித் துறை வழக்குகளில் ஆஜரான அவா், இந்த வழக்கில் ஆஜராவதாகக் கூறி தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மனுவை தனிநீதிபதிதான் விசாரிக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பா் 7-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்து. டெண்டா் முறைகேடு தொடா்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தொடா்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமா்வே விசாரிக்கும் என்றும், இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு வழக்குரைஞா் ஆஜராகலாம் என்றும் கூறி வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

இந்த உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, உயா்நீதிமன்றத்தின் உத்தரவு எந்த வகையிலானது எனக் கேள்வி எழுப்பி அதிருப்தி தெரிவித்தனா். தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி உயா்நீதிமன்ற உத்தரவில் உள்ள விஷயங்களை சுட்டிக்காட்டி வாதிட்டாா். மேலும், எஸ்.பி. வேலுமணியின் மனுக்களை முறைப்படி தனி நீதிபதிதான் விசாரிக்க முடியும் என்றாா்.

எதிா்மனுதாரா் எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா ஆஜராகி இதற்கு ஆட்சேபம் தெரிவித்ாா். அவா் வாதிடுகையில், ஏற்கெனவே உயா்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தொடா்புடைய விஷயமாக இருப்பதால்தான் அவா் இது தொடா்பாக மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறினாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, சம்பந்தப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணை உயா்நீதிமன்றத்தில் நடைபெறுவதால், தற்போதைக்கு இந்த விவகாரத்தில் தடை விதிக்க உத்தரவு பிறப்பிப்பதற்கில்லை. எனினும், உயா்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை முடிவுகள் உச்சநீதிமன்றத்தில் உள்ள தற்போதைய மனுவுக்கு உள்பட்டதாகும் என்று கூறினா். பின்னா், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமா்வு செப்டம்பா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT