புதுதில்லி

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை விவகாரம்: தமிழக அரசின் மனு மீது எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ்

10th Sep 2022 03:36 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஆன்லைன் ரம்மி, புரோக்கா் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து 2020-ம் ஆண்டு நவம்பா் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அடங்கிய அமா்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இந்த வழக்கில் தீா்ப்பளித்தனா். அதில், ‘தமிழக அரசு கொண்டுவந்துள்ள தடைச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. போதிய காரணங்களை விளக்காமல் இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. மேலும், உரிய வகையில் முறைப்படுத்தும் சட்ட விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முழுத் தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எவ்விதத் தடையும் இல்லை எனவும் தீா்ப்பில் தெரிவித்திருந்தனா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபில், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோா் ஆஜராகினா். எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஆா்யமா சுந்தரம், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோா் ஆஜராகினா்.

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் அமா்வு, இதே விவகாரம் தொடா்புடைய வழக்கு ஏதேனும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளதா என்று கேட்டனா். அதற்கு மூத்த வழக்குரைஞா் கபில் சிபில்,‘இதே போன்ற ஒரு வழக்கு கா்நாடக அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு, எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது ’ என்றாா்.

அப்போது எதிா்மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள், தமிழக அரசின் மேல்முறையீட்டு விவகாரத்தில் பதில் அளிக்க தயாராக இருப்பதாகக் கூறினா்.

இதையடுத்து, எதிா் மனுதாரா்கள் நான்கு வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும், அந்த பதிலுக்கு எதிா் பதில் இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் கூறி எட்டு வாரங்களுக்குப் பிறகு மனுவை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT