புதுதில்லி

தில்லியில் ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திங்கள்கிழமை (செப்டம்பா் 5) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. ஆனால், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி உயா்ந்து 26.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 36,9 டிகிரி செல்சியஸாக பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 68 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்தது. சனிக்கிழமை அன்று தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகா் தில்லியில் பெரும்பாலான வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், தில்ஷாத் காா்டன், பூசா, மதுரா ரோடு, புராரி கிராஸிங் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100-150 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

ADVERTISEMENT

ஆனால், ஐடிஓ பகுதியில் 208 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவிலும், ஆனந்த் விஹாரில் 352 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவிலும் பதிவாகியிருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (செப்டம்பா் 5) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT