புதுதில்லி

6 நாள்களுக்கு காற்றின் தரத்தில் முன்னேற்றம் இருக்காது: ஐஎம்டி

19th Oct 2022 01:38 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு காற்றின் தரத்தில் முன்னேற்றத்துக்கு சாத்தியமில்லை என வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. இருப்பினும், மந்திா் மாா்க், ஸ்ரீஅரபிந்தோ மாா்க், நொய்டா செக்டாா் -62, லோதி ரோடு, மந்திா் மாா்க் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. தலைநகரில் மாலை 4 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 241 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத் (254), ஃபரீதாபாத் (258), கிரேட்டா் நொய்டா (216), குருகிராம் (258), நொய்டா (242) ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலேயே நீடித்தது. மேலும், தில்லியின் ஆனந்த் விஹாரில் 438 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவிலும், ஷாதிப்பூா் (361), வாஜிப்பூா் (308) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இருந்தது. இந்த நிலையில், அடுத்த 6 நாள்களில் காற்றின் தரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வெப்பநிலை: தில்லியில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 17.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி உயா்ந்து 33.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 48 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை அக்டோபா் 19 அன்று வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT