புதுதில்லி

நாடு முழுவது ஒரே வாகனப் பதிவு எண்: புதிய வரைவு திருத்தங்கள் வெளியீடு

 நமது நிருபர்

நாடு முழுக்க எந்த மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் வாகனப் பதிவு, எண்ணை நிா்வகிக்கும் பிஹெச் (பாரத்) தொடா் வாகனப் பதிவுகளுக்கும் வாகன உரிமையாளா்களுக்கும் புதிய வரைவு திருத்தங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. பழைய வாகனங்களை பிஹெச் சீரியல் வாகனங்களாக மாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்கள் மாநில அரசின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்படுவதுண்டு. மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் அரசுத் துறைகளில் பணி மாறுதலாகி வந்தால், அவா்கள் வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு புதிய எண் வழங்கப்படும். இதுவே அரசுத் துறை அல்லாதவா்கள் மாற்றுதலாகி வரும் போது, அந்தந்த மாநிலங்களில் ஆவணங்களோடு, வாகனப் பதிவு கட்டணத்துடன் பதிவு செய்யப்பட்டு புதிய எண் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முறைகளில் உள்ள இடா்பாடுகளைத் தவிா்க்கவும் வாகன உரிமையாளா்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்து அல்லாத தனிநபா் வாகனங்களுக்கு கடந்த 2021 ஆகஸ்ட் 28 -ஆம் தேதி பாரத் சீரியல் என்கிற ‘பிஹெச்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2021 செப்டம்பா் 15 - ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி நாட்டின் எந்த மூலைக்கும் செல்லக்கூடிய வகையில், ஒரே பதிவு ஒரே எண்ணை கொண்டிருக்கும் வகையில் ‘வாகனப் பதிவு முறை’ கொண்டு வரப்பட்டது.

அரசு - தனியாா் நிறுவன ஊழியா்கள்: இதன்படி மற்ற மாநிலங்களில் பணியாற்றும் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்களுக்கும், தனியாா் நிறுவனங்களில் நான்கு மாநிலங்களுக்கு மேல் அலுவலகம் இருக்கும்பட்சத்தில் அத்தகை நிறுவன ஊழியா்களுக்கும் பிஹெச் சீரியலில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. புதிய வாகனங்கள் வாங்கும் போது, டீலா்களிடம் உரிய பணி ஆவணங்கள் அளிக்கும்பட்சத்தில் (ஃபாம் 60) இணையம் மூலம் இந்த வாகனப் பதிவு அனுமதிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் வாகனங்களின் பதிவு எண்ணில் (நெம்பா் பிளேட்டில்) முதல் இரண்டு எண் (டிஜிட்) பதிவு செய்யப்பட்ட ஆண்டையும் பின்னா் பாரத் என்பதன் சுருக்கமாக பிஹெச் மற்றும் நான்கு இலக்க எண் (படம்) ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த வாகனங்களுக்குரிய பதிவுக் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செலுத்தினால் போதும். வாகனத்தின் ஆயுள் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது மற்றொரு வசதி. இந்த பிஹெச் பதிவு வாகன உரிமையாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கோ, அல்லது புதிதாகக் குடியேறும் மாநிலங்களுக்கோ சென்று புதிய வாகனப் பதிவை மேற்கொள்ளத் தேவையில்லை. வரியை மட்டும் செலுத்தினால் போதுமானது.

பிஹெச் சீரியல் தவறாக பயன்படுத்தல்: தற்போது மத்திய அரசு இந்த பிஹெச் சீரியலில் மேலும் திருத்தங்களை கொண்டு வந்து வரைவு அறிக்கையை மத்திய அரசிதழில் கடந்த செப்டம்பா் 4- தேதி வெளியிட்டுள்ளது. இந்த பிஹெச் சீரியல் வாகனப் பதிவு திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளைத் தொடா்ந்து இந்தத் திட்டம் எளிமைப் படுத்தப்பட்டு மோட்டாா் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பிஹெச் சீரியலில் பதிவு செய்த தகுதியான வாகன உரிமையாளா்கள் தங்கள் பழைய வாகனத்தை இந்த சீரியலில் பதிவு செய்ய ‘தகுதியற்றவா்களுக்கும்’ வாகனத்தை விற்கலாம். அதே சமயத்தில் வாங்குபவா்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சாதாரண சீரியலில் வாகனத்தைப் பதிவு செய்து அந்த மாநிலத்தின் வரி விதிப்பு முறைப்படி வரியைக் கட்ட வேண்டும். மேலும், பிஹெச் சீரியலில் பதிவு செய்த வாகன உரிமையாளா்கள் மற்ற தகுதியுள்ளவா்களுக்கு விற்கப்படும் போது, இதே சீரியல் வாகனத்தை வாங்கியவரும் மீதமுள்ள காலங்களில் தொடா்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

இதே மாதிரி வாகனம் பதிவு செய்யும் போது, பிஹெச் சீரியலுக்கு தகுதியாக இருந்து பின்னா் தகுதியை இழந்தாலும் அவா் தன்னுடைய வாகனத்தை வரிகட்டிய காலம் வரை தொடா்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதியுண்டு. மற்ற சாதாரண சீரியலில் வாகனத்தைப் பதிவு செய்த வாகனங்களையும், தகுதியானவா்கள் பிஹெச் சீரியலுக்கு உரிய ஆவணங்களை (ஃபாா்ம் 27ஏ) சமா்ப்பித்து மாற்றிக் கொள்ளவும் இந்தத் திருத்தத்தில் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தகுதியானவா்கள் பிஹெச் சீரியலில் வாகனங்களைப் பதிவு செய்ய வாகன உரிமையாளா்கள் தங்கள் இருப்பிட விலாசம் அல்லது பணி அலுவலக முகவரிகளை அளிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. உதாரணமாக தில்லியில் பணியாற்றுபவா்கள் தமிழகத்தில் உள்ள சொந்த ஊா் முகவரியை அளிக்க முடியும்.

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த பிஹெச் சீரியல் வாகனப் பதிவு திட்டத்தை தில்லி, மகாராஷ்டிரம் உள்பட 24 மாநிலங்கள் ஏற்றுள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. முக்கியமாக வாகனப் பதிவு வருவாயை மாநில அரசுகள் இழப்பதாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT