புதுதில்லி

மாசுவைக் கட்டுப்படுத்த தில்லியில் பழைய பேருந்துகளை இயக்காமல் இருக்க அண்டை மாநிலங்களுக்கு ஆம் ஆத்மி அரசு வேண்டுகோள்

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் பழைய பேருந்துகளையும், செல்லுபடியாகும் மாசு சான்றிதழ் இல்லாத பேருந்துகளையும் இயக்க வேண்டாம் என்று ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இது தொடா்பாக நகர அரசின் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பிற மாநிலங்களைச் சோ்ந்த தங்களது சகாக்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடியதாக தகவலறிந்த தில்லி அரசின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து தில்லி அரசின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லிக்கு பழைய பேருந்துகளை அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் அண்டை மாநிலங்களின் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், மாசு அளவைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் 8 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பேருந்துகளை தில்லிக்கு அனுப்பக் கூடாது என்றும் கூறினோம். அதே போன்று, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் இல்லாத பேருந்துகளையும் அனுப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எங்களிடம் காற்று மாசு தரவு உள்ளது. அதன் அடிப்படையில் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட தலையீடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

தில்லியில் மிகவும் மாசுள்ள இடங்களில் ஒன்றாக ஆனந்த் விஹாா் இருப்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இது ஒரு தொழில்துறை பகுதியாகும். மேலும், ஐஎஸ்பிடி பேருந்து நிலையமும் உள்ளது. இதனால், உத்தர பிரதேசம், ஹரியாணா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளின் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களை (பியுசிசி)

சரிபாா்க்க எங்கள் அமலாக்க குழுக்கள் இந்த வாரம் முதல் ஐஎஸ்பிடி பேருந்து நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆனந்த் விஹாரில் நடத்தப்பட்ட சோதனையின் போது செல்லுபடியாகும் ‘பியுசி’ சான்றிதழ் இல்லாமல் எந்த பேருந்துகளும் இதுவரை இயக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

காா்பன் மோனாக்சைடு மற்றும் காா்பன் டை ஆக்சைடு போன்ற பல்வேறு மாசுபாடுகளுக்கான உமிழ்வு தரநிலைகளுக்காக வாகனங்கள் அவ்வப்போது

பரிசோதிக்கப்படுகின்றன. அதன் பிறகு அந்த வாகனங்களுக்கு பியுசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூலம் இயக்கப்படும் இரு மற்றும் மூன்று சக்கர மோட்டாா் வாகனங்களில் மாசு சோதனைக்கான கட்டணம் ரூ.60 ஆகும். நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.80, டீசல் வாகனங்களுக்கு ரூ.100 ஆகும். வாகன மாசுவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அக்டோபா் 1 முதல் தில்லியில் பிஎஸ் 5-க்கு இணங்கும் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்துமாறு அண்டை மாநிலங்களுக்கு ஜூன் மாதம் தில்லி அரசு கடிதம் எழுதியிருந்தது. தினசரி 1,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தேசியத் தலைநகருக்குள் அண்டை மாநிலங்களில் இருந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லியில் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களை இயக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) 2014-இல்பிறப்பித்த உத்தரவில், 15 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வாகனங்களை பொது இடங்களில் நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் தில்லியில் காற்று மாசு உச்சபட்ச அளவில் இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு செல்லுபடியாகும் பியுசி சான்றிதழ் இல்லாத பேருந்துகள் தேசியத் தலைநகருக்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT