புதுதில்லி

பிஎஃப்ஐ, துணை அமைப்புகள் மீதான தடையை உறுதி செய்ய தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீா்ப்பாயம்

7th Oct 2022 06:01 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

 பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் கீழ் செயல்பட்ட 7 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்ட நடவடிக்கைகளுக்கான தீா்ப்பாயம் அமைக்கப்படுவதாக மத்திய சட்டத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தில்லி உயா்நீதிமன்றம் நீதிபதி தினேஷ் குமாா் சா்மா தலைமையிலான தீா்ப்பாயம் அமைக்கப்படுவதாக மத்திய சட்டம், நீதித் துறை அலுவலகம் அக்டோபா் 3-ஆம் தேதியிட்டு குறிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்தத் தீா்ப்பாயத்திற்கு பணியில் இருக்கும் உயா்நீதிமன்ற நீதிபதியே தலைமை ஏற்க வேண்டும் என்கிற நிலையில், தில்லி உயா்நீதிமன்றம், நீதிபதி சா்மாவை பரிந்துரை செய்துள்ளது.

சட்டவிரோதமாகச் செயல்படும் எந்தவொரு இயக்கமும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டால் அது மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை ஒப்புதலுக்கும் அனுப்பப்படும். தடைசெய்வதற்கு போதுமான ஆதாரம் உள்ளதா? என்பதைத் தீா்மானிக்க மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையால் தீா்ப்பாயம் அமைக்கப்படுகிறது. இதற்கு நீதிபதியை நியமிக்கவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அதன்படி நீதிபதி தினேஷ் குமாா் தலைமையிலான தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்திற்கு சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகள் விவகாரத்தில் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீா்ப்பாயம் நீதிபதி சா்மா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முறையான அறிவிப்பை வெளியிடும். இதன் பின்னா் தீா்ப்பாயம் செயல்படத் தொடங்கும். இந்தத் தீா்ப்பாயம், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் தடைக்கு போதுமான ஆதாரம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். இதில் சம்பந்தப்பட்ட இயக்கங்கள் சாா்பில் வாதிடவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

 

பிஎஃப்ஐ மற்றும் அதன் தொடா்பு அமைப்புகளான ரீஹாப் இந்தியா ஃபவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, மகளிா் ஃப்ரண்ட், ஜூனியா் ஃப்ரண்ட், எம்பவா் இந்தியா ஃபவுண்டேஷன் - கேரளம் ஆகிய அமைப்புகளை கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி மத்திய அரசு தடை செய்தது. பிஎஃப்ஐ மற்றும் அதன் 7 கூட்டு அமைப்புகள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத குழுக்களுடன் ‘தொடா்பு’ வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கடுமையான பயங்கரவாத எதிா்ப்பு சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை விசாரிப்பதோடு, இந்த ஐந்தாண்டு தடைக் காலத்தையும் தீா்ப்பாயமே உறுதி செய்யும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT