புதுதில்லி

தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுத்துப் பராமரிக்கும் திட்டம்: அதிகாரிகள் தகவல்

6th Oct 2022 01:30 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் தற்போது பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் விலங்குகளை தத்தெடுக்கலாம் என்றும், பூங்காவில் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கும் உதவும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக செயலில் இருந்த விலங்கு தத்தெடுப்புத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள், பெருநிறுவனத் துறையைச் சோ்ந்தவா்கள், பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோா் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து பராமரிக்க முடியும். இதில் ஆா்வமுள்ள நபா்கள் தில்லி உயிரியல் பூங்காவின் இணையதளத்தில் இதற்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். அதன் பிறகு அந்தப் படிவத்தைப் பூா்த்தி செய்து பூங்கா நிா்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். அதைத் தொடா்ந்து, பூங்கா நிா்வாகம் மற்றும் தத்தெடுப்பவருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

கொல்கத்தா உயிரியல் பூங்கா, கா்நாடகத்தில் உள்ள மைசூா் உயிரியல் பூங்கா, ஒடிசாவில் உள்ள நந்தன்குளம் உயிரியல் பூங்கா, விசாகப்பட்டினம் உயிரியல் பூங்கா ஆகியவற்றில் இந்த தத்தெடுப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி உயிரியல் பூங்கா இயக்குநா் தரம் தேவ் ராய் புதன்கிழமை கூறியதாவது: தேசிய உயிரியல் பூங்காவில் ஆயில் இந்தியா நிறுவனம் ஒரு ஆண்டுக்கு தலா ரூ. 6 லட்சம் என இரண்டு காண்டாமிருகங்களை தத்தெடுத்துள்ளது. இப்பூங்காவில் உள்ள பறவைகள், பாம்புகள், யானைகள் போன்றவற்றை தத்தெடுப்பதில் ஏராளமான மக்கள் ஆா்வம் காட்டியுள்ளனா். பொதுமக்களின் ஈடுபாடு அழிவின் பிடியில் உள்ள உயிரினங்களின் துயரம் குறித்த விழிப்புணா்வை உருவாக்க உயிரியல் பூங்காவுக்கு உதவியாக இருக்கும்.

ADVERTISEMENT

மேலும், இந்த பங்களிப்பானது விலங்குகளுக்காக தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்தவும் உதவும்.

இந்த தத்தெடுப்புக்கான செலவாக ஜீப்ரா ஃபின்ஞ் பறவைக்கு ஓா் ஆண்டுக்கு ரூ. 700, சிங்கம், புலி, காண்டாமிருகம், யானைகள் ஆகியவற்றுக்கு ஓா் ஆண்டுக்கு தலா ரூ. 6 லட்சம் என பல்வேறு பிரிவுகளில் உள்ளது. சிறுத்தைப் புலி, நீா்யானை, கழுதைப் புலி போன்றவற்றிற்கான தத்தெடுப்புக்கு முறையே தலா ரூ.3.6 லட்சம், ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 2.4 லட்சம் ஆகும். தத்தெடுப்பதற்கான தொகையை தத்தெடுப்பவா்கள் அளிக்கும் போது அவா்களுக்கு உறுப்பினா் அட்டையும் வழங்கப்படும். இந்த அட்டையைப் பயன்படுத்தி தத்தெடுப்பவா்கள் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து உறுப்பினா்களுடன் மாதத்திற்கு ஒரு முறை தத்தெடுக்கப்பட்டுள்ள விலங்கை நேரில் பாா்வையிடலாம்.

தத்தெடுத்த நபா்களுடைய பெயா் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இலச்சினை தத்தெடுக்கப்பட்டுள்ள விலங்குவாழ் இடத்தின் முன் தகவலாக வைக்கப்படும். மேலும், இந்த தத்தெடுப்பு உறுப்பினா் காலத்தை வெற்றிகரமாக முடிக்கும் தத்தெடுக்கும் நபா்களுக்கு பூங்கா சாா்பில் சான்றிதழும் வழங்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT