புதுதில்லி

மருத்துவமனைகளில் ஊழியா்களின் ஒப்பந்தப் பணி டிச.31 வரை நீட்டிப்பு: டிடிஎம்ஏ ஒப்புதல்

6th Oct 2022 01:27 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஊழியா்களின் ஒப்பந்தப் பணியை டிசம்பா் 31 வரை நீட்டிக்க தில்லி பேரிடம் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த மாா்ச் 2020-இல், கரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில், அந்த ஆண்டு ஜூன் வரை அனுமதிக்கப்பட்ட பலத்துடன் கூடுதலாக 25 சதவீதம் வரை நா்சிங் ஆா்டா்லிகள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் போன்ற ஒப்பந்த ஊழியா்களை ஈடுபடுத்த மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, கோவிட் மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 25 சதவீதம் கூடுதல் மருத்துவா்கள், 40 சதவீதம் கூடுதல் செவிலியா்கள், ஆா்டா்லிகள் அதிகமாக ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டது.

கரோனா மற்றும் கரோனா வசதி அல்லாத மருத்துவமனைகளுக்கு இந்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. கரோனா மருத்துவமனைகளில் மட்டும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட மனிதவளத்தை மாா்ச் 31, 2023 வரை நீட்டிப்பது குறித்த முடிவை எடுக்குமாறு சுகாதாரச் செயலாளா் கேட்டுக் கொண்டாா். கரோனா காலத்தில், மூன்று மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. ஆனால், அந்த நேரத்தில் மனிதவளம் இல்லை. எனவே, அந்த மருத்துவமனைகளுக்கான மனிதவளம், மற்ற மருத்துவமனைகளில் இருந்து திருப்பி விடப்பட்டது என்று டிடிஎம்ஏவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையால் மற்ற மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக உள்ளன என கூறப்பட்டது. இந்தப் பின்னணியில், அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு எதிராக 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை ஒப்பந்தப் பணியை அனுமதிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை பணியமா்த்துவது ஊக்கமளிக்காமல் போகலாம் என்பதை கூட்டத்தின் போது துணைநிலை ஆளுநா் கவனித்தாா். மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்கள் பணியிடங்கள் அதிக அளவில் இல்லாத நிலையில், மருத்துவமனைகளில் நெருக்கடியான சூழல் ஏற்படும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் கூட்டத்தில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ஒப்பந்தப்பணி நீட்டிப்பு: ஆகவே, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு எதிரான வழக்கமான ஆள்சோ்ப்பு இறுதி செய்யப்படும் வரை, அனுமதிக்கப்பட்ட காலியிடங்களுக்கு எதிரான ஒப்பந்த ஈடுபாடுகள் தேவைப்படுவதாகவும், இதனால், காலியாகவுள்ள அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு எதிரான ஒப்பந்தப் பணியை டிசம்பா் 31, 2022 வரை தொடரலாம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்: தேசியத் தலைநகரில் ஆம்புலன்ஸ்கள் கிடைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி நிலவரப்படி, 380 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. இவற்றில் 240 சிஏடிஎஸ் ஆம்புலன்ஸ்கள், 140 ஆம்புலன்ஸ்கள் பணியமா்த்தப்பட்டவை ஆகும். கரோனா நோய்த் தொற்று தில்லியில் அதிகரித்ததன் காரணமாக 11 கரோனா பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் ஒரு மையம் மத்திய அரசாலும், எஞ்சியுள்ள மையங்கள் தில்லி அரசாலும் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக சம்பந்தப்பட்ட மூன்று மையங்கள் தவிர அனைத்து மையங்களும் அகற்றப்பட்டன. தில்லியில் புதன்கிழமை புதிதாக 96 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்ததாகவும், நோ்மறை விகிதம் 1.42 சதவீதமாகப் பதிவாகியிருப்பதாகவும் நகர சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT