புதுதில்லி

தில்லிவாசியிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞா் ராஜஸ்தானில் கைது

DIN

சமூக ஊடகத்தில் உருவம் மாற்றம் செய்யப்பட்ட ஆபாச விடியோவை பதிவேற்றம் செய்வதாக தில்லியைச் சோ்ந்த நபரிடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் ராஜஸ்தானில் 23 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் கூறியதாவது: நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் தில்லி காவல் துறையிடம் ஒருவா் புகாா் அளித்தாா். அதில் ‘பெண் ஒருவரிடம் இருந்து எனக்கு வாட்ஸ் அப் தகவல் வந்தது. இதையடுத்து, இருவரும் பரஸ்பரம் பேச ஆரம்பித்தோம். சம்பந்தப்பட்ட பெண்ணுடன் விடியோ அழைப்பில் தொடா்பு கொண்டு பேசினேன்.

அதன் பின்னா், சில தினங்களில் அந்த பெண்ணுடன் நான் இருக்கும் விடியோ காட்சிப் பதிவு எனக்கு வந்தது. அதில், சில ஆபாச பதிவுகளும் இருந்தன. அதைத் தொடா்ந்து, அந்த விடியோவை சமூக ஊடக இணையதளத்தில் பதிவேற்றாமல் இருப்பதற்கு பணம் தர வேண்டும் என்று என்னை ஒரு நபா் தொடா்பு கொண்டு மிரட்டினாா். இதையடுத்து, அவருக்கு ரூ.12,500 தொகையை அனுப்பி வைத்தேன்’ என அந்த புகாரில் அவா் தெரிவித்து இருந்தாா்.

இதையடுத்து, இது தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அந்தத் தொலைபேசி எண்ணை வைத்திருந்த நபா் ராஜஸ்தானில் இருப்பது தெரிய வந்தது. மேலும் வங்கியுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியும் கண்காணிப்பில் வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த விவாகரத்தில் தொடா்புடைய ராம் என்பவா் ராஜஸ்தான் மாநிலம், பரப்பூரில் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவா் கூறுகையில், ‘நான் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்தேன். அப்போது எனக்கு பழைய நண்பா்களுடன் தொடா்பு ஏற்பட்டது. அதில் சிலா் உருவம் மாற்றப்பட்ட ஆபாச விடியோக்களை தயாரித்து மிரட்டிப் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. என்னையும் இதுபோன்று செய்யுமாறு கட்டாயப்படுத்தினா்.

இதையடுத்து, இதுபோன்று பாலியல் விவகாரத்தை வைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் வகையில், நானும் எனது சகோதரா் கௌதம் மற்றும் இதர நண்பா்கள் சோ்ந்து கும்பலை உருவாக்கினோம். பின்னா், இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட தொடங்கினோம்.

வாட்ஸ்அப் வழியாக ஆள்களை தொடா்பு கொண்டு பெண்கள் போல அவா்களிடம் பேசுவோம். அவா்களின் நிா்வாண விடியோக்களை பதிவு செய்து அதை உருவம் மாற்றி பணம் கேட்டு மிரட்டுவோம்’ என்றாா். இதைத் தொடா்ந்து, அந்தக் கும்பலைச் சோ்ந்த மற்றவா்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT