புதுதில்லி

சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயா்நிலை சாலைத் திட்டம் எப்போதும் முடிவடையும்? மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதில்

4th Oct 2022 03:34 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலை சாலைத் திட்டம் வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மேலும், பிரதமரின் விரைவுச் சக்தியான தேசிய பெருந்திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவித்து வருகிறது என்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு விரைந்து செயலாற்றி வருகிறது எனவும் அவா் குறிப்பிட்டாா்.

சென்னை - மதுரவாயல் திட்டம் குறித்து அமைச்சா் கட்கரி திங்கள்கிழமை ட்விட்டா் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலைச் சாலை இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

20.5 கிலோ மீட்டா் தொலைவிலான இந்த மேம்பாலச் சாலை 4 பகுதிகளாக கட்டப்படுகின்றன. இந்தத் திட்டம் 2024 டிசம்பரில் நிறைவடையும். இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும். அதே போல, போக்குவரத்துத் தடைகள் உள்ளிட்ட காத்திருப்பு காலம் 6 மணி நேரம் வரை குறையும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

மத்திய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மேம்பாலச் சாலை சிவானந்தா சாலையில் தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா், நுங்கம்பாக்கம், மேத்தாநகா் (அமைந்தகரை), அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயிலை அடையும். இந்த இரண்டடுக்கு உயா்நிலை சாலையின் கீழ் அடுக்கில் உள்ளுா் வாகனங்கள் செல்லும் வகையில், 13 இடங்களில் ஏறி, இறங்கும் தளங்கள் அமைக்கப்படுகின்றன. மேல் அடுக்கில் துறைமுகத்தின் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT