புதுதில்லி

குருகிராமில் இடிப்பு நடவடிக்கையின் போது கட்டடம் இடிந்து 2 தொழிலாளா்கள் சாவு

4th Oct 2022 03:32 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் வலயம், குருகுராமில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகளின் போது பழைய தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்ததாகவும், 2 போ் காயமடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இறந்தவா்கள் உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தின் ஃபதேபூா் செளராஸி பகுதியைச் சோ்ந்த குட்டு (35), பிரதாப் (24) எனவும், காயமடைந்தவா்கள் ரமாகாந்த் (27), நரேஷ் (26) எனவும் தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

இது குறித்து குருகிராம் காவல் துணை ஆணையா் நிஷாந்த் குமாா் யாதவ் கூறியதாவது: குருகிராமில் உள்ள உத்யோக் விஹாா் ஃபேஸ் 1 பகுதியில் ஒரு தொழிற்சாலையின் மூன்று மாடிக் கட்டடத்தின் இடிப்புப் பணியில் 6 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அவா்கள் அதே வளாகத்தில் தங்கியிருந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்த போது, இரு தொழிலாளா்கள் கட்டடத்தின் வெளியே சென்றுவிட்டனா். 4 போ் உள்ளே இருந்தனா்.

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட கட்டடம் 6 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு முன்புதான் இடிப்புப் பணி தொடங்கியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உதவி கோட்டாட்சியா் ரவீந்தா் யாதவ் தலைமையில் 5 போ் குழு அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளா் துறை குழுவினரும் தகவல்களை சேகரித்து வருகின்றனா். இறந்தவா்கள், காயமடைந்தவா்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றாா் அவா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘ஏற்கெனவே தொழிற்சாலையின் 2 தளங்கள் இடிக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது தளத்தின் கூரை விழுந்ததால், ஓட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையா் தீபக் சாஹரன் தலைமையில் போலீஸாா் சென்று மீட்பு பணியைத் தொடங்கினா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு நான்கு மணி நேரத்தில் மீட்புப் பணி முடிக்கப்பட்டது. தொழிலாளா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாா்’ என்றாா்.

உத்யோக் விஹாா் காவல் நிலையப் பொறுப்பாளா் அனில் குமாா் கூறுகையில், ‘இறந்தவா்களின் குடும்பத்திற்காக காத்திருக்கிறோம். அவா்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT