புதுதில்லி

ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான கழிப்பறை வசதி: தமிழகத்திற்கு மூன்றாம் இடம்

3rd Oct 2022 03:35 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான கழிப்பறை வசதி உறுதி செய்யப்பட்டு, திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்ட சுகாதார மதிப்பீட்டில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கான விருதை தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ஆண்டுதோறும், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீா், தூய்மைப் பணித் துறை, நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள தூய்மைப் பணிகளின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அளவீடுகளை அறிந்து மாநிலங்கள் வாரியாக தரவரிசைப்படுத்தி காந்தி ஜெயந்தி தினத்தில் விருதுகளை வழங்குகிறது. 2021-22-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், தெலங்கானாவும் ஹரியாணாவும் முறையே முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. தமிழகம் ‘மூன்றாம்’ இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், ஊரகத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோா் முன்னிலையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கினாா். தூய்மை இந்தியா விழாவில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் மற்றும் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறையின் முதன்மை செயலா் பெ.அமுதா அகியோா் குடியரசுத் தலைவரிடம் இருந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டனா்.

மேலும், வீட்டுத் தோட்டம், கழிவு நீா் மேலாண்மை பணிகளுக்கான மத்திய அரசின் ‘சுஜலாம்’ என்கிற 100 நாள் நீா் மேலாண்மை இயக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கு தேசிய அளவில் தமிழகம் ‘ஐந்தாம்’ இடம் பெற்றுள்ளது. அதற்கான விருதையும் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டாா். சுகாதாரம் சாா்ந்த விழிப்புணா்வு நடவடிக்கைகளுக்கும் இவ்விழாவில் தமிழகத்திற்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழகத்தில், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், முதல்கட்டத்தில் மக்களிடையே பிரசாரங்களை மேற்கொண்டு சுமாா் 50 லட்சம் குடியிருப்புகளுக்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. மேலும், இடவசதி இல்லாத வீடுகள் பயன்பெறும் வகையில், 413 சமுதாய சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டன. இதன் மூலம், 12,525 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டது.

தூய்மை இந்தியா இரண்டாம் கட்டத்தில், பாதுகாப்பான கழிப்பறை வசதிகளில் விடுபட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக 3.89 லட்சம் கழிப்பறை வசதிகள் தமிழக அரசால் ஏற்ப்படுத்தபட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீா் மேலாண்மை மற்றும் கிராம தூய்மைகளுக்காக 2020-21-ஆம் ஆண்டு முதல் பல்வேறு முன் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT