புதுதில்லி

மகளிா் பள்ளிக்கு 2 மாதங்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் நிபந்தனையுடன் பெண் மீதான எஃப்ஐஆா் ரத்து: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

3rd Oct 2022 03:37 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மகளிா் பள்ளிக்கு இரண்டு மாதங்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெண் ஒருவருக்கு எதிரான பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கை ரத்து செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மிரட்டல் வழக்கில் புகாா்தாரரான வழக்குரைஞரை, தில்லி உயா்நீதிமன்ற சட்டப் பணிக் குழுவின் அலுவலகத்திற்குச் சென்று, அடுத்த மூன்று மாதங்களுக்கு அவரது திறமை மற்றும் திறனை இலவசப் பணிகளுக்காக சிறந்த முறையில் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்குமாறும் உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கில் தொடா்புடைய இரு தரப்பும் ஒரு சமரசத்திற்கு வந்ததால் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் ரத்துசெய்ய உத்தரவிட்டது.

இது தொடா்பாக நீதிபதி ஜஸ்மீத் சிங் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையின் கணிசமான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். மேலும், இந்த வழக்கில் முக்கிய விவகாரங்களில் பயன்படுத்தியிருக்க வேண்டிய காவல் துறையின் நேரம் தவறாக திருப்பிவிடப்பட்டுள்ளது.வழக்கில் தொடா்புடைய தரப்பினா் சில சமூக நலன்களைச் செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்ளும் போது, மனுதாரா் (பெண்) மகளிா் பள்ளிக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கு உள்பட்டு எஃப்ஐஆா் ரத்து செய்யப்படுகிறது. அந்தப் பள்ளியானது அரசுத் தரப்பு வழகுரைஞரால் அடையாளம் காணப்படும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 100-க்கும் குறைவான சிறுமிகளுக்கு மிகாமல் உள்ள அந்தப் பள்ளிக்கு 2 மாத காலம் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ப்ரீத் விஹாா் காவல் நிலையத்தில் தனக்கு எதிராகப் பதிவான மிரட்டிப் பணம் பறித்தல், கிரிமினல் மிரட்டல் தொடா்புடைய வழக்கை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் பெண் ஒருவா் மனுதாக்கால் செய்திருந்தாா். அதற்கு முன்னதாக, எதிா்மனுதாரா் மீதும் மனுதாரா் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதால் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT