புதுதில்லி

கிராமப் புறங்களில் 55% குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீா்: தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது

3rd Oct 2022 03:40 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

ஜல் ஜீவன் திட்டத்தின்படி, தமிழக கிராமப் புறங்களில் 55 சதவீத குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பெருமளவில் இந்தப் பணிகளை மேற்கொண்டதற்காக முதல் பரிசை தமிழக அரசு பெற்றுள்ளது.

தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஜல்ஜீவன் விருதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் வழங்கினாா். அப்போது, தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் செயலா் சிவ் தாஸ் மீனாவும் உடனிருந்தாா். இதில் இரண்டாவது பரிசு மேகாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்கள் வரிசையில் முதல் இரு இடங்களில் புதுச்சேரியும்,கோவாம் இடம்பெற்றுள்ளன.

தமிழக ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 லட்சம் குடியிருப்புகளில் இதுவரை 69.14 லட்சம் குடியிருப்புகளுக்கு (55%) குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55.79 லட்சம் குடியிருப்புகளுக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ரூ. 18,000 கோடி அளவிற்கு 42 புதிய குடிநீா் திட்டங்கள், 56 குடிநீா் திட்டங்களின் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் விருதை பெற்றுக் கொண்ட பின்னா் அமைச்சா் கே.என். நேரு, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விஞ்ஞான் பவனில் சந்தித்தாா். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளையும் தமிழக அமைச்சா் வலியுறுத்தினாா். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பெரிய கூட்டுக் குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதனால், போதுமான கால அவகாசத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சா் கே.என். நேரு கோரிக்கை விடுத்தாா். மேலும், கூட்டுக் குடிநீா் திட்டங்களின் நீடித்த நிலைத் தன்மையை உறுதி செய்ய இதன் அருகே, தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு ஜல் ஜீவன் திட்டத்தில், ரூ. 2,400 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினாா்.

கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கு தானியங்கி இயந்திரங்களை நிறுவி விரைவாக குடிநீா் வழங்குவதற்கு, மேலும் கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்தாா். மேலும், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் உபரி நீா் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, அந்த நீரை அருகில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்புவதற்கான திட்டங்களுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT