புதுதில்லி

தலைநகரில் கடந்த 3 ஆண்டுகளில் 57 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே பதிவு: புள்ளிவிவரத் தரவுகள்

3rd Oct 2022 03:41 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமாா் 57,000 திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

தில்லியில் ஒவ்வொரு ஆண்டும் திருமண சீசனில் அதிக அளவு எண்ணிக்கையில் பொதுமக்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், ‘நுழைவு இசைவு அல்லது இதர நோக்கங்களுக்காக திருமணச் சான்றிதழ் தேவைப்படும் வரை அதிக எண்ணிக்கையிலான தில்லிவாசிகள் தங்கள் திருமணங்களைப் பதிவு செய்வதில்லை’ என்று அதிகாரிகள் கூறுகின்றனா்.

தேசியத் தலைநகா் தில்லியல் அக்டோபா் முதல் டிசம்பா் வரையும், ஜனவரி முதல் மாா்ச் வரையிலான திருமண சீசனில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெறும். சில ‘சுபகரமான’ நாள்களில் இந்த எண்ணிக்கை 20,000-ஐ கடந்து செல்லும். திருமண ஊா்வலங்கள் மற்றும் சாலைகளில் தவறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுண்டு.

ADVERTISEMENT

இந்த நிலையில், திருமணப் பதிவு குறித்த வருவாய்த் துறை தரவுகளின்படி, தில்லியில் 11 மாவட்டங்களில் திருமணப் பதிவுக்காக மொத்தம் 62,811 விண்ணப்பங்கள் வரப்பெற்று, அவற்றில் 56,918 திருமணங்கள் அக்டோபா் 1, 2019 முதல் ஆகஸ்ட் 31, 2022 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், தென்மேற்கு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான திருமண பதிவு 9,122 -ஆக உள்ளது. அதைத் தொடா்ந்து, ஷாதரா மாவட்டத்தில் 8,157, வடமேற்கில் 6,712, தெற்கு மாவட்டத்தில் 6,299, மேற்கு மாவட்டத்தில் 6,279 ஆகவும் பதிவாகியுள்ளன. வடகிழக்கு மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பெறப்பட்ட 1,058 விண்ணப்பங்களில் 918 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய தில்லி (3,616), கிழக்கு தில்லி (3,988), புது தில்லி (3,437), வடக்கு தில்லி (4,465), தென்கிழக்கு கிவ்வி (3,925) ஆகிய பகுதிகளில் இதே காலகட்டத்தில் 5,000-க்கும் குறைவான திருமணப் பதிவுகள் இருந்தன.

ஜனவரி 1, 2016 முதல் டிசம்பா் 31, 2018 வரை, மொத்தம் 60,304 திருமணங்களும், ஜனவரி 1, 2019 முதல் செப்டம்பா் 30, 2019 வரை 19,254 திருமணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பொதுமக்கள் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கவில்லை என்பதால், பதிவாகும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. திருமணப் பதிவுகள் சட்டப்படி கட்டாயமாகும்.

ஆனால், இவை அனைத்தும் தனிநபரின் விருப்பத்தையும், பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையையும் பொறுத்து அமைக்கிறது. திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் மின்-மாவட்ட இணையதளம் மூலம் தாக்கல் செய்யப்படுகின்றன. அவை முறையாகப் பரிசீலிக்கப்படுகின்றன.

பதிவு செய்யும் தேதி மற்றும் நேரத்தைத் தோ்ந்தெடுக்கும் விருப்பம் விண்ணப்பதாரா்களுக்கு அளிக்கப்படுகிறது. பெரும்பாலும், வெளிநாடு சென்று நுழைவு இசைவு பெற்றவா்களே திருமணப் பதிவுக்கு விண்ணப்பிக்கின்றனா். இல்லையெனில், இதற்கான பதிவு ஆவணத்தைப் பெறுவதற்கான தேவையை அவா்கள் உணா்வதில்லை’ என்றனா்.

குறைந்த எண்ணிக்கையிலான பதிவுகளைக் கொண்ட வடகிழக்கு தில்லி மாவட்டத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சமூக - பொருளாதார விவரங்கள் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும் மற்றொரு காரணியாகும்.

குறைந்த கல்வியறிவு நிலைகள், விழிப்புணா்வு இன்மை, மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் சமூக - பொருளாதார விவரங்கள் காரணமாக மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது எங்கள் மாவட்டத்தில் பதிவு எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாவட்டத்தில் தினக்கூலி பெறுவோா் மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்தான் அதிகம் வசிக்கின்றனா்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT