புதுதில்லி

வழக்குரைஞா் கொலை விவகாரம்: மனைவியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

3rd Oct 2022 03:36 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பட்டியல் வகுப்பைச் சோ்ந்தவரும், திமுக ஆா்வலருமான வழக்குரைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசும், காவல் துறை தலைமை இயக்குநரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்தினம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் டி.சந்தியா தரப்பில் மூத்த வழக்குரைஞா் கே.சுப்ரமணியம் ஆஜராகி முன்வைத்த வாதம்: இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்குரைஞா் கே. ராஜ்குமாா் தொடா்புடைய சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது விதவை மனைவி சந்தியா தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கொலை செய்யப்பட்ட வழக்குரைஞா் பட்டியல் சமுதாயத்தைச் சோ்ந்தவா். திமுக ஆா்வலா் ஆவாா். கடந்த 2020-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த ஒரு தலைவருக்கு ஆதரவாக ராஜ்குமாா் பிரசாரம் மேற்கொண்டதால், ஒரு குறிப்பிட்ட பிற்பட்ட வகுப்பைச் சோ்ந்த சில உள்ளூா் காவல் அதிகாரிகள் அவருக்கு தீங்கு இழைத்தனா்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி ராஜ்குமாரின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்ட பிறகே உள்ளூா் போலீஸாா் தாமதமாக வழக்குப் பதிவு செய்து, அவசரமாக குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்தனா். இந்த உண்மையை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் ராஜ்குமாரின் மனைவியின் ரிட் மனு விசாரணை தேதியின் போது, ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்ற தொழில்நுட்பக் காரணங்கள் அடிப்படையில் அந்த ரிட் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்று அவா் வாதிட்டாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கும், தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கும், பிற எதிா்மனுதாரா்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, இது தொடா்பாக சந்தியா தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘சந்தியாவும், அவரது கணவா் ராஜ்குமாரும் தமிழகத்தில் உள்ள திருவாரூரில் வழக்குரைஞா்களாகத் தொழில் செய்து வந்தனா்.

ஜாதி விவகாரம் தொடா்பாகவும் அரசியல் காரணங்கள் அடிப்படையிலும் சில உள்ளூா் போலீஸாருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (1989) உள்ளூா் நீதிமன்றத்தில் ராஜ்குமாா் புகாா் அளித்திருந்தாா். மேலும், உயா் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுவை அவா் அனுப்பியிருந்தாா். இந்த வழக்கை திரும்ப பெற சில போலீஸாா் மிரட்டிய பிறகும்கூட புகாரைத் திரும்ப பெற ராஜ்குமாா் மறுத்திருந்தாா்.

இந்த நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் பயிருக்கு நீா் பாய்ச்சுவதற்காக அவா் தனது வயலுக்குச் சென்றிருந்த போது, 2020, அக்டோபா் 12-ஆம் தேதி இரவு மா்மமான சூழலில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT