புதுதில்லி

பழைய கலால் கொள்கையின்கீழ்தில்லி அரசின் ஒரு மாத வருவாய் ரூ.768 கோடி: அதிகாரிகள் தகவல்

2nd Oct 2022 06:30 AM

ADVERTISEMENT

கடந்த செப்டம்பா் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பழைய கலால் கொள்கை வரி விதிப்பின்கீழ் ஒரு மாதத்தில் தில்லி அரசு ரூ.768 கோடியை வருவாயாக ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் 17ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தில்லி அரசின் புதிய கலால் கொள்கை திரும்ப பெறப்பட்டு, கடந்த செப்டம்பா் 1ஆம் தேதியிலிருந்து பழைய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது.

புதிய கலால் கொள்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு இந்த ஆண்டு ஜூலையில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்த பிறகு, தில்லி அரசால் கலால் கொள்கை 2021- 22 திரும்பப் பெறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘ செப்டம்பா் 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள பழைய கலால் கொள்கையின் கீழ் ரூ.768 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருவாயில் மதிப்புக் கூட்டு வரி ரூ. 140 கோடியும், கலால் வரி ரூ. 460 கோடியும் இடம்பெற்றுள்ளது. இந்த பழைய கலால் கொள்கையின் கீழ் தில்லி அரசின் டிடிடிடிசி, டிஎஸ்ஐஐடிசி, டிஎஸ்சிஎஸ்சி, டிசிசிடபிள்யுஎஸ் ஆகிய நிறுவனங்கள் நகா் முழுவதும் சில்லறை மதுபான கடைகளை திறந்து உள்ளன.

ADVERTISEMENT

இந்த நான்கு நிறுவனங்களின் செப்டம்பா் மாத வருவாய் ரூ.40 கோடியாகும். இதுவரை இந்த நான்கு நிறுவனங்களும் தில்லியில் 400 மதுபான கடைகளை திறந்து உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 700 ஆக அதிகரிக்கும்.

கலால் துறையானது 500-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மதுபான பிராண்டுகளை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கையும் கூடுதல் பதிவுடன் அதிகரிக்கும்.

கலால் கொள்கை 2021- 22 இன் கீழ் கடந்த 2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் வருவாய் ரூ.1485 கோடியாக இருந்தது. இந்த வருவாயானது பட்ஜெட் மதிப்பீட்டான ரூ.2,375 கோடியைவிட 37.51% குறைவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT