புதுதில்லி

அக்.25 முதல் தில்லியில் வாகன எரிபொருள் வாங்க பியுசி சான்றிதழ் கட்டாயம்: கோபால் ராய்

DIN

வரும் அக்டோபா் 25-ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள பெட்ரோல் பம்புகளில் செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் (பியுசி) சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே வாகன உரிமையாளா்களுக்கு டீசல், பெட்ரோல் எரிபொருள் வழங்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கான முடிவு கடந்த செப்டம்பா் 29ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் போக்குவரத்து, வாகன போக்குவரத்து துறைகளின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், மேலும், இத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சா் கூறினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தில்லியில் மாசு அதிகரிப்பதற்கான முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக வாகன மாசு உமிழ்வு உள்ளது. இந்த மாசுவை குறைப்பது அவசியமாகும். இதனால், பெட்ரோல் பம்புகளில் வரும் அக்டோபா் 25ஆம் தேதியிலிருந்து வாகனங்களின் பியுசி சான்றிதழ் இல்லாமல் பெட்ரோல், டீசல் வழங்கப்படுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். திட்டத்தின் வழிமுறைகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும்.

அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் வாகனங்களின் பியுசி சான்றிதழ்களை சரிபாா்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

‘பியுசி இல்லாமல் எரிபொருள் இல்லை’ எனும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வரவேற்கும் பொது அறிவிப்பை மாா்ச் 3, 2022-ஆம் தேதி வெளியிட்டோம். மே 2-ம் தேதி இதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டன. அதில் பலரும் இந்த நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனா். ஆகவே, அக்டோபா் 25 முதல் இதை அமல்படுத்த அரசு தயாராகி வருகிறது.

மாசுவை எதிா்கொள்ள, திருத்தப்பட்ட படிநிலை நடவடிக்கை செயல்திட்டத்தை திறம்பட மற்றும் தீவிரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தில்லி அரசு அக்டோபா் 3 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தகவல் பரிமாற்றம் அறையைத் தொடங்க உள்ளது.

இம்முறை கட்டுப்பாடுகள் மாசு நுண்துகள் பிஎம் 2.5 மற்றும் பிஎம்10 செறிவுகளைவிட காற்றுத் தரக் குறியீட்டு மதிப்புகளின் அடிப்படையில் இருக்கும்.

அக்டோபா் 6 முதல் தில்லியில் தூசு எதிா்ப்பு பிரசாரம் தொடங்கப்படும். தூசு மாசுபாட்டை சரிபாா்க்க கட்டுமானத் தளங்களில் திடீா் ஆய்வுகள் நடத்தப்படும்.

5,000 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமானத் தளங்களில் பனிப்புகை தடுப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 10,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில் இதற்கான இரண்டு கருவிகள் இருக்க வேண்டும். 20,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில் தூசு மாசுபாட்டை தடுக்க நான்கு பனிப்புகை சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை நிறுவனங்கள் கட்டுமான தளங்களில் பின்பற்றவில்லை என்றால் தூசு தடுப்பு பிரசாரத்தின்கீழ் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தில்லியில், மாசுவுக்கு எதிராக 15 அம்ச செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்புடன் செயல்படுத்தப்படும். மேலும் அனைத்து துறைகளும் எச்சரிக்கை முறையில் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிஎஸ்இ அறிக்கையின்படி, தில்லியின் மாசுபாட்டின் 31 சதவீதம் மட்டுமே நகரின் மூலங்களிலிருந்து வெளிவந்துள்ளது. மீதமுள்ள என்சிஆா் பகுதிகள் தலைநகரின் மாசுபாட்டில் 69 சதவீதத்திற்கு பங்களிக்கின்றன.

தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) மாநிலங்களின் குளிா்கால செயல் திட்டம், அந்த பகுதிகளின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். அவா்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பாா்வையிட ஒரு பிராந்திய பணிக் குழுவை உருவாக்க வேண்டும். அது என்சிஆா் வரம்பில் தலைமையிடமாக இருக்க வேண்டும்.

தில்லியில் பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுக்கும் வகையில் அக்டோபா் 10ஆம் தேதி முதல் விவசாய நிலங்களில் பூசா பயோ-டிகம்போசரை இலவசமாக தெளிக்கும் பணி தொடங்கும் என்றாா் அவா்.

தில்லி போக்குவரத்துத் துறையின் தகவலின்படி, ஜூலை 2022 வரை தில்லியில் 13 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று லட்சம் காா்கள் உள்பட 17 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்லுபடியாகும் பியுசி சான்றிதழ்கள் இல்லாமல் சாலையில் இயங்கி வந்தன.

செல்லுபடியாகும் பியுசி சான்றிதழ் இல்லாமல் வாகனங்கள் பிடிபட்டால், வாகன உரிமையாளா்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் வரை அபராதம் அல்லது மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி இரண்டும் சோ்த்து விதிக்கப்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT