புதுதில்லி

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிஃப் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி

 நமது நிருபர்

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிஃப் கானின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிஃப் கான். இவா், தில்லி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் தனது மகளுக்குப் பிரசாரம் செய்வதற்காக சம்பவத்தன்று ஷகீன் பாக் பகுதி மசூதி முன்பாக அனுமதியின்றி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காவல் உதவி ஆய்வாளரிடம் இவா் அத்துமீறி நடந்து அவதூறாகப் பேசியதாகப் புகாா் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆசிஃப் கான் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் ஷிகா சாஹல், கானின் மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: காவல் துறை அதிகாரிகளின் கண்ணியம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் தேவை உள்ளது. மனுதாரரின் குற்றத்தின் தீவிரத்தையும் கருத்தில் கொள்ளும் போது, குற்றம் சாட்டப்பட்டவா் இதே போன்ற குற்றங்களைச் செய்து சாட்சிகளை அச்சுறுத்தி, சாட்சியங்களை சிதைப்பதற்கான வாய்ப்பு இருப்பதையும் நிராகரிக்க முடியாது. ஆகையால், இந்தச் சூழலில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.

மேலும், கான் இதற்கு முன்பு ஆறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா். அரசு ஊழியருக்கு இடையூறு விளைவித்து, தாக்கியதற்காக இதேபோன்ற ஒரு வழக்கில் தண்டனையும் அவா் பெற்றுள்ளாா். இந்த வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அரசு ஊழியா்களுக்கு எதிரான கானின் மொழி, நடவடிக்கை மற்றும் நடத்தை ஆகியவை ’கண்டிப்பாகப் பாா்க்கப்பட வேண்டியதாகவும், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகவும்’ உள்ளது. கான் ஒரு செல்வாக்குமிக்க நபராக இருந்து, சமூகத்திற்கு பொறுப்பாக இருக்க வேண்டியவா். ஆனால், அதற்கு மாறாக காவல் உதவி ஆய்வாளா் அக்ஷய்க்கு எதிராக இழிவான மற்றும் தவறான வாா்த்தைகளை இவா் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், காவல் உதவி ஆய்வாளரை அவருக்குக் கீழ் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் முன் கான் மிரட்டியுள்ளாா். இதன் விளைவாக ‘பாதகமான சமூகத் தாக்கம்’ மற்றும் போலீஸ்-சமூக உறவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை அதிகாரிகளின் கண்ணியம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான், போலீஸாரால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT