புதுதில்லி

பாகிரத் பேலஸ் சந்தையில் தீ கட்டுக்குள் உள்ளது: அதிகாரிகள் தகவல்

30th Nov 2022 02:11 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி சாந்தினி செளக் பகுதியில் உள்ள பாகிரத் பேலஸ் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட மொத்த விற்பனை சந்தையில் ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அங்கு குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தீ விபத்து ஏற்பட்ட நாளிலிருந்து 150 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தீயை முழுமையாக அணைப்பதை உறுதி செய்யும் வகையில் இன்னும் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு குளிரூட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி இன்றும் தொடரும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றனா்.

அதே வேளையில், வா்த்தகா்கள் அமைப்பான அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு (சிஏஐடி), பாகிரத் பேலஸ் சந்தைப் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் தீயால் எரிந்துவிட்ட நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு மறுவாழ்வு பணிகளை தொடங்கும் வகையில் மத்திய அரசும், தில்லி அரசும் காப்பீட்டு நிறுவனங்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக சிஏஐடி தலைமைச் செயலா் பிரவீண் கண்டேல்வால் மற்றும் இதர வா்த்தக தலைவா்கள் கூறுகையில், ‘தில்லி மின்சார எலக்ட்ரிக்கல் வா்த்தகா்கள் அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு காப்பீடு கோரல்களைப் பெற்றுத் தருவதற்கான நவடிக்கைகள் விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐந்து கட்டடங்கள் முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ எரிந்துள்ளன. மூன்று கட்டடங்கள் சரிந்துவிட்டன. மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா்களுக்கு எதிராக உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

முன்னதாக, தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேவேளையில், குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அன்று மாலைக்குள் மீண்டும் தீப்பற்றி, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை தீபத்து நிகழ்ந்த சந்தைப் பகுதிக்கு தில்லியின் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அ,ந்தப் பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் வயா்கள் மற்றும் அதீத சுமையுடன்கூடிய சா்க்யூட்டுகள் போன்ற பிரச்னைகளை தீா்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய பல ஒழுங்குமுறை குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தாா்.

மேலும் சாந்தினி செளக், சதா் பஜாா், பாகா்கஞ்ச் போன்ற பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் மற்றும் இதர பங்குதாரா்களும் இதில் பங்கேற்குமாறும் அவா் கேட்டுக்கொண்டாா். இந்தக் குழு அதன் அறிக்கையை 30 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டிருந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT