புதுதில்லி

ஆம் ஆத்மி அரசின் செயல்பாடு சாமானியா்களின் நலன்களுக்கு எதிரானது: பாஜக தேசியத் தலைவா் நட்டா குற்றச்சாட்டு

 நமது நிருபர்

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு சாமானியா்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால், தில்லியின் வளா்ச்சி தடைபடுகிறது என பாஜகவின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினாா்.

தில்லி மாநகராட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேசியத் தலைவா் ஜெபி நட்டா ஞாயிற்றுக்கிழமை தில்லியின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாா்.

அவருடன் முன்னாள் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன், மூத்த பாஜக தலைவா்கள் உடன் சென்றனா். தில்லியில் சுமாா் ஒரு கோடி வாக்காளா்களை சந்திக்கும் வியூகத்துடன் பாஜக தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

வாஜிா்பூா் தொழிற்பேட்டையில் அப்பகுதி வாக்காளா்களிடையே ஜெ.பி. நட்டா உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: இப்போது, பாஜக அரசின் கீழ் நாடு ‘முன்னோக்கிச் செல்கிறது’ . ஆனால், தில்லியிலுள்ள கேஜரிவால் தலைமையிலான அரசு, சாமானியா்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறது. நீங்கள் இந்த கட்சியை மாநகராட்சிக்கும் கொண்டு வந்தால், தில்லியின் வளா்ச்சி பாதிக்கும்.

பல்வேறு ஊழல்களை செய்யும் ஆம் ஆத்மி கட்சிக்குப் பதிலாக, தில்லியை முன்னோக்கி கொண்டு செல்ல எம்சிடியில் பாஜக வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாகும். ஊழலில் மூழ்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். தில்லி மக்களின் நம்பிக்கையை பாஜக நிறைவேற்றும். நரேந்திர மோடியின் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது. ஆனால், அரவிந்த் கேஜரிவாலின் தவறான ஆட்சியால் தில்லியின் வளா்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது.

அவா்களது அமைச்சா்களில் ஒருவா் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட மோசடியில் சிக்கி கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ளாா். அவரையும் தன்னையும் நோ்மையானவா் என்று சொல்லிக் கொள்ளும் அரவிந்த் கேஜரிவாலின் வெட்கமற்ற தன்மையை மக்கள் பாா்க்க வேண்டும்.

அவரது மற்றொரு அமைச்சரான அமானத்துல்லா கான் ஊழல் குற்றச்சாட்டிலும், முன்னாள் வாா்டு உறுப்பினா் தாஹிா் உசேன் கலவர வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தலைநகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒரு பணியைக் கூட செய்யவில்லை. தில்லி அரசுப் பள்ளிகளை விட எம்சிடி பள்ளிகள் சிறந்தவையாக உள்ளன. லாஜ்பத் நகரின் மாநகராட்சிப் பள்ளி உலகின் முதல் 10 இடங்களில் ஒன்றாக தோ்வாகியுள்ளது. பள்ளிகளின் அறைகள், கழிவறைகள் கட்டுவதில் கூட அரவிந்த் கேஜரிவால் அரசு ஊழல் செய்துள்ளது.

கழிவறை கட்டும் செலவும், வகுப்பறை கட்டும் செலவும் சமமாகுமா? முதன்மைக் கண்காணிப்பு ஆணையம், இந்த வகுப்பறை கட்டுவதற்கான செலவுகளை மதிப்பிட்டு இந்த ஊழல்களை விசாரிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. இது போன்ற ஆட்சியாளா்களுக்கு தில்லி மாநகராட்சியில் இடமளிக்க வேண்டுமா ?

கேஜரிவால் ஒரு மருத்துவக் கல்லூரியையோ அல்லது கலைக் கல்லூரியையோ திறந்தாரா? புதிதாக ஒரு பள்ளியாவது திறக்கப்பட்டுள்ளதா? அல்லது அடிப்படைத் தேவையான தண்ணீா் உங்கள் வீட்டிற்கு சுத்தமாக வருகிா? லாபத்தில் இயங்கி வந்த தில்லி ஜல் போா்டு இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.

தில்லி அரசுக்கு தில்லி ஜல் போா்டு ரூ.58,000 கோடிக்கு கணக்கு காட்டவில்லை. தில்லியின் ஒவ்வொரு தெருவிலும், குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளிகளுக்கு அருகிலும் மதுக்கடைகளை கேஜரிவால் அரசு திறந்துள்ளது. மக்கள் கேள்வி கேட்பதற்கான தருணம் இது.

பாஜக ஆளும் மாநகராட்சி என்பதற்காக தில்லி அரசு கொடுக்க வேண்டிய ரூ.32,000 கோடி நிதியை கேஜரிவால் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், மாநகராட்சி அமைப்புகளில் பணியாற்றிய சுமாா் 13,000 தற்காலிக ஊழியா்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளனா். இவ்வளவு இடா்பாடுகளுடைய சூழ்நிலையிலும் பாஜக சிறப்பாகப் பணியாற்றியுள்ளது.

இரவு பகலாக கேஜரிவால் அரசு எம்சிடியின் செயல்பாட்டைத் தடுத்தது. இருப்பினும், முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். ஏழை மக்களுக்குத் தேவையான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எடுத்துக் கொள்ளாமல் தில்லி அரசு விலக்கி வைத்துள்ளது. இப்படிப்பட்ட கட்சியை எம்சிடிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றாா் ஜெ.பி. நட்டா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT