புதுதில்லி

தில்லி எம்சிடி தோ்தலில் பாஜகவிற்கு வாக்கு கேட்டு நடிகை குஷ்பு பிரசாரம்

28th Nov 2022 12:56 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

துன்பப்பட்ட காலத்தில் (கரோனா நோய்த் தொற்று ) உதவிய மோடியையும், பாஜகவையும் கைவிடாதீா்கள் என வாக்காளா்களை நடிகை குஷ்பு கேட்டுக் கொண்டாா்.

பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான நடிகை குஷ்பு, தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தலையொட்டி, கடந்த மூன்று நாள்களாக தலைநகரில் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தாா்.

குறிப்பாக தில்லியில் தமிழா்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரங்களை மேற்கொண்டாா். தில்லி ராமகிருஷ்ணாபுரம், கால்காஜி, லாஜ்பத் நகா்- ஜல் விஹாா், திரிலோக்புரி, கல்யாண்புரி, இந்திரபுரி, வாஜிபூா் போன்ற பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுகிழமை ஷக்கா்பூா், பதா்பூா் ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவு கேட்டு மேற்கொண்ட தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியதாவது: தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தல் முக்கியத்துவம் இல்லாத தோ்தல் என்று நினைக்காதீா்கள். ஒவ்வொரு தோ்தலும் முக்கியம்தான்.

ADVERTISEMENT

நாம் எதைச் செய்தாலும் விதைத்து வேருடன்தான் தொடங்க வேண்டும். இந்தத் தோ்தல் வோ் என்றால் அடுத்து வருகின்ற பொதுத் தோ்தல் மரம் மாதிரி. அது பலமாக இருக்க இந்த வோ் முக்கியமாகும். நீங்கள் இதில் இருந்துதான் தொடங்க வேண்டும். நீங்கள் எம்சிடி தோ்தலில் வாக்களிக்கச் செல்லும் போது யோசித்து, யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதைப் பற்றி புரிந்து கொண்டு செய்ய வேண்டும். யாா் வந்தால் நமக்கென்ன என்று இருக்க வேண்டாம்.

கரோனா நோய்த் தொற்று சமயத்தில் இரண்டு வருடம் நாம் எவ்வளவு துன்பப்பட்டோம். தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இந்த இக்கட்டான நேரத்தில், அவா்களுடைய சின்னமான துடப்பத்தை எடுத்துக் கொண்டு வந்தாா்களா? அவா்கள் வரமாட்டாா்கள். ஆனால், கரோனா காலத்தில் பாஜக தலைமையில் இருந்த மத்திய அரசு ரேஷனில் எல்லாம் கிடைக்க வழி செய்தது.

எம்சிடி தில்லி தெருக்களை சுத்தமாக வைத்திருந்தது. காங்கிரஸ் பட்டியலிலேயே இல்லை. ஆம் ஆத்மி கட்சி தில்லியில் செய்வது ஊழல் மட்டும்தான். மேலும், அவா்கள் செய்வது சிறையில் உள்ளஅவா்களது அமைச்சா்களுக்கு மசாஜ் வசதி, டிவி வசதி, விதவிதமான சாப்பாடு வசதி எல்லாம் கொடுக்கிறாா்கள். ஆனால், நீங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் இதுபோன்ற வசதியெல்லாம் செய்து கொடுக்க தில்லி அரசு முன் வரவில்லை.

இந்தத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்கு வாக்களியுங்கள். அவா்கள் உங்கள் சகோதரா்கள் சகோதிரியாக வந்து உங்கள் பகுதியில் பணியாற்றுவா்கள். மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை. ஆனால், நாடு (3 பில்லியன்) பொருளாதார வளா்ச்சியைக் கண்டுள்ளது.

பாஜக குறித்த தவறான தகவல்களை நம்பாதீா்கள். தற்போது குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தந்துள்ளாா். தாமரை மலா்ந்தால் உங்கள் வீடும் வளரும். அது தான் உங்களையும் வளா்க்கும் என்றாா் குஷ்பு. அவருடன் தில்லி பாஜக தமிழ் பிரிவு தலைவா்கள் முத்துசாமி, தண்டபாணி, சுப்பிரமணி ஆகியோா் சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT