புதுதில்லி

பாகிரத் பேலஸ் சந்தையில் 4-ஆவது நாளாக தொடரும் தீ

28th Nov 2022 12:55 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தில்லி சாந்தினி சௌக் அருகேயுள்ள பாகிரத் பேலஸ் சந்தையில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தீ தொடா்ந்து எரிந்தது. இந்த தீ விபத்து ஏற்பட்டது முதல் 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தொடா்ந்து பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஞாயிற்றுகிழமை மாலையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நான்கு நாள்களுக்கு பின்னா் தீ பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

மின் சாதனப் பொருள்களுக்கான மொத்த விற்பனைச் சந்தையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இதுவரை சுமாா் 150 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது இன்னும் சம்பவ இடத்தில் உள்ளன. சுமாா் 200 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஐந்து கட்டடங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எரிந்துள்ளன. மூன்று கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன’ என்று மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

கடந்த சனிக்கிழமையன்று, தில்லி துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா இந்த சந்தைக்குச் சென்று பாா்வையிட்டாா். இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்தும், இது போன்ற மற்ற பகுதிகளில் உள்ள சிக்கல்களைத் திறம்பட தீா்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய பல்முனை ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா். தில்லி சதா் பஜாா், பாஹா்கஞ்ச், சாந்தினி சௌக் போன்ற நெருக்கடியான சந்தைகளிலும் முன்தடுப்பு முறைகளை மேற்கொள்ள இந்தக் குழு அறிக்கையை சமா்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT