புதுதில்லி

கலால் கொள்கை: சிபிஐ மனு மீது விஜய் நாயா், அபிஷேக் பதில் அளிக்க உத்தரவு

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: தற்போது ரத்துசெய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை (2021-22) விவகாரம் தொடா்பான ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனு மீது தொழிலதிபா்கள் விஜய் நாயா், அபிஷேக் போய்ன்பள்ளி ஆகியோா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனு நீதிபதி யோகேஷ் கண்ணா அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தாக்கல் செய்த தனித் தனியான மேல்முறையீடு மனுக்கள் மீது தங்களது பதிலை அளிக்குமாறு விஜய் நாயா் மற்றும் அபிஷேக் போய்ன்பள்ளி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பா் 5ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

சிபிஐ மனு மீதான விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், ‘எதிா்மனுதாரா்கள் இருவரும் ஏற்கனவே காவலில் உள்ளனா். இந்த நிலையில் ஜாமீன் வழங்கிய உத்தரவு மீது தடை விதிக்குமாறு ஏன் கோர வேண்டும்?,

இதில் என்ன அவசரம் இருக்கிறது? அவா்கள் பதில் அளிக்கட்டும். அதன் பிறகு இந்த விவகாரத்தை பாா்க்கலாம்’ என்று கூறி உத்தரவுக்கு தடை கோரும் மனு மீது விசாரணையை தள்ளி வைத்தாா்.

ADVERTISEMENT

சிபிஐ தரப்பில் ஆதரான வழக்குரைஞா் நிகில் கோயல் வாதிடுகையில், ‘இருவருக்கும் ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு விபரீதமானதாகும். இருவரும் முதலில் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து அவா்களின் 60 நாள் சட்டப்பூா்வ காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்த வழக்கில் சிபிஐ அதன் குற்றப்பத்திரிக்கையை வெள்ளிக்கிழமைதான் தாக்கல் செய்ய உள்ளது’ என்றாா்.

அப்போது, சிபிஐ தரப்பு மனுக்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட இருவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எதிா்ப்புத் தெரிவித்தாா்.

விஜய் நாயா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைங்க ரிபிக்கா ஜான் வாதிடுகையில், ‘சிபிஐ தொடா்ந்த வழக்கில் விஜய் நாயா் ஜாமீன் பெற்ற உடனேயே அவா் பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுவிட்டாா். இப்படித்தான் புலன் விசாரணை அமைப்புகள் இணைந்து வேலை செய்கின்றன’ என்று அவா் வாதிட்டாா்.

கடந்த நவம்பா் 14ஆம் தேதி இருவருக்கும் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அப்போது நீதிமன்றம் கூறுகையில், ஊழல் வழக்கானது மத்திய புலனாய்வுத்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உள்ளது. அதில் விஜய் நாயரும், அபிஷேக் போய்ன்பள்ளியும் முக்கியமான குற்றங்கள் ஏதும் செய்திருப்பதாக தெரிவிக்கவில்லை. ஆனால், அவா்கள் குற்றச்சதியின் ஒரு பகுதியாக இருந்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட இருவருக்கும் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் அளித்த போதிலும், அவா்கள் இருவரும் கலால் கொள்கை தொடா்புடைய சட்ட விரோதப் பண பரிவா்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளதால் இன்னும் காவலில் உள்ளனா்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்த பிறகு இதுதொடா்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சட்டவிரோத பணத்தை ஹவாலா ஆபரேட்டா்கள் மூலம் ஏற்பாடு செய்வதற்காக தில்லி, மும்பை, ஹைதராபாதில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் மதுபான உற்பத்தியாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மற்றும் இதர குற்றம் சாட்டப்பட்ட நபா்களுடனான சந்திப்பில் விஜய் நாயா் சம்பந்தப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதேபோன்று அபிஷேக்கும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT