புதுதில்லி

சிபிஐ விசாரணை உத்தரவுக்கு எதிரான பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு மனு மீது தமிழக அரசு, சிபிஐக்கு நோட்டீஸ்

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: சிலைக் கடத்தல் வழக்கு தொடா்புடைய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓய்வுபெற்ற ஐஜி ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது தமிழக அரசு, சிபிஐ, சிபிஐ பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

சிலைக் கடத்தல்காரா்களுடன் சோ்ந்து சதியில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புலன் விசாரணை கோரி, இதே பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதா் பாட்சா என்பவா் கடந்த 2019, ஏப்ரல் 20 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை கவனத்தில் எடுத்துக்கொண்ட சென்னை உயா்நீதிமன்றம் ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் தொடா்புடைய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை 22 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

துணை ஐஜி அல்லது உயா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை புலன் விசாரணைக்கு நியமிக்கவும், இந்த விவகாரத்தை மறுவிசாரணை செய்வதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சிபிஐக்கு வழக்கை மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவுக்கு எதிராக ஏ.ஜி. பொன் மாணிக்கல்வேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ். ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் பொன் மாணிக்கவேல் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.நாகமுத்து ஆஜராகி, ‘இந்த சிலை கடத்தல் தொடா்புடைய வழக்கு விவகாரம் உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வின் கண்காணிப்பில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சிலை கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எதிா்மனுதாரா் (காதா் பாட்சா) தாக்கல்செய்த மனு மீது உரிய வகையில் பரிசீலிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தவறாகும். இதனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.

எதிா்மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் இன்ஃபேன்ட் தினேஷ் ஆஜராகி ‘டிவிஷன் அமா்வில் உள்ள விவகாரத்திற்கும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் தொடா்பு இல்லை. இந்த விவகாரத்தில் மனுதாரா் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பான உண்மை விவரங்களை சிபிஐ விசாரணை மூலம் கண்டறிவது அவசியமாகும்’ என்று வாதிட்டாா்.

அப்போது, இது தொடா்பாக எதிா்மனுதாரா்களான தமிழக அரசு, காதா்பாட்சா உள்ளிட்டோா் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் இந்த விவகாரத்தில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதால் அந்த அமைப்பையும் இந்த வழக்கில் சோ்க்க வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து, சிபிஐயையும் வழக்கில் சோ்த்து அதற்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT