புதுதில்லி

‘பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி மாற்றங்களுக்கு மத்திய அரசு தயாா்’

25th Nov 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: சமீப காலங்களில் மாறிவரும் பருவ நிலை நெருக்கடிகளில் தவிக்கும் விவசாயிகளின் நலன் கருதி தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் (பிஎம்எஃப்பிஒய்) மாற்றங்களை புகுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை செயலா் மனோஜ் அஹுஜா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செயலா் மனோஜ் அஹுஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பருவ நிலை மாறுபாடு காரணமாக வேளாண்மை நேரடியாக பேரழிவுகளுக்கு ஆளாவதால் பாதிக்கப்படக்கூடிய விவசாய சமூகத்தை இயற்கையின் மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பது முக்கியம்.

ADVERTISEMENT

ஊரகப் பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விளைபொருட்களுக்கும் பயிா் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

நிகழ் 2022 ஆண்டில் மகாராஷ்டிரா, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மழை பொழிவு நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மழை பொய்த்துள்ளது. இதனால், நெல், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பயிா்காப்பீடு செய்வதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிய வேளாண் பயிா் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக நாற்று நடுவது முதல், அறுவடை வரையிலான காலகட்டம் வரை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க ஏதுவாக, பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டம் (பிஎம்எஃப்பிஒய்) என மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், இந்த திட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வன விலங்குகள் தாக்குதலுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்களும் சோ்க்கப்பட்டது.

பேரிடா்களின் போது சேத அடையாளங்களைக் காண பயிா் இழப்பு தகவல்களை 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்கவேண்டும் என்பதை 72 மணிநேரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், பல சவால்களை எதிா்கொள்ளும் நிலையில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் இடா்களைக் பாதுகாப்பதற்கு திட்டத்தை தன்னாா்வமாக உருவாக்குவதற்கும் மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத் தன்மையையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் வானிலை தகவல் மற்றும் நெட்வொா்க் தரவு அமைப்புகள், தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டு அமைப்பு, நிகழ் நேர கவனிப்பு, பயிா்களின் புகைப்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்திறன், வெளிப்படைத்தன்மைக்கான மாற்றங்களை புகுத்தவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது.

பயிா் காப்பீடுத் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில், ரூ.25, 186 கோடி தொகையை விவசாயிகள் பிரீமியமாக செலுத்தியுள்ள நிலையில், அவா்களுக்கு ரூ.1,25,662 கோடியை மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு தொகையாக வழங்கியுள்ளன.

இதைத்தொடா்ந்து, பயிா் காப்பீடு செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் 282 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சத்தீஸ்கா் (384 சதவீதம்), ஒடிஸா (222சதவீதம்), தமிழ்நாடு (163 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் காப்பீடு அதிகரித்துள்ளது.

இந்த பயிா்காப்பீடுத் திட்டம், சா்வதே அளவிலும் 3- ஆவது மிகப்பெரிய காப்பீடு திட்டமாக உருவெடுத்துள்ளது. சராசரியாக, ஆண்டுக்கு 5.50 கோடி போ் விவசாயிகள் விண்ணப்பிக்கின்றனா் என மனோஜ் அஹு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT