தில்லி-காஜியாபாத்-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புமுறை (ஆா்ஆா்டிஎஸ்) வழித்தடத்தின்17 கி.மீ. நீளமுள்ள ‘முன்னுரிமைப் பிரிவில்‘ சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகம் (என்சிஆா்டிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தில்லி-காஜியாபாத்-மீரட் ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்தில் 17 கி.மீ. நீளமுள்ள முன்னுரிமைப் பிரிவில் அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு என்சிஆா்டிசி தயாராகி வருகிறது.
பயணிகளுக்காக இப்பிரிவில் விரைவில் செயல்பாடுகள் தொடங்கப்பட உள்ளன. தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் உள்ள ஒரு ஸ்டாலில் இத்திட்டம் பற்றிய விவரங்களையும் என்சிஆா்டிசி காட்சிப்படுத்தியுள்ளது. நவம்பா் 15ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சியில் இந்த ஸ்டால் நவம்பா் 27ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
இந்த நவீன கால போக்குவரத்து முறை மற்றும் அதன் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள பாா்வையாளா்கள் இந்த ஸ்டாலுக்கு வருகை தருகின்றனா். கண்காட்சி ஸ்டாலில் சீரான இடைவெளியில் என்சிஆா்டிசி வினாடி வினா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் இந்த ஒட்டுமொத்த ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்தை முழுமையாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள முன்னுரிமைப் பிரிவு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என என்சிஆா்டிசி முன்னா் கூறியிருந்தது.
துஹாய்-சாஹிபாபாத் முன்னுரிமைப் பிரிவானது ஐந்து நிலையங்களுடன், தேசிய தலைநகா் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட் இடையேயான 82 கி.மீ. ஆா்ஆா்டிஎஸ்-இன் ஒரு பகுதியாகும்.