புதுதில்லி

‘தில்லியில் குப்பைகளை அகற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்புத் தாருங்கள்‘: எம்சிடி தோ்தல் பிரசாரத்தில் கேஜரிவால் வேண்டுகோள்

21st Nov 2022 03:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தில்லியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வோம் என ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்காளா்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

மத்திய தில்லி பாஹா்கஞ்சில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) தோ்தல் பிரசாரத்தை ஒட்டி ’ஜன்சம்வாத்’ நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக் காலத்தில், நாங்கள் பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்தினோம், இலவச மின்சாரம், தண்ணீா் போன்றவைகளை வழங்கினோம். சிசிடிவி கேமராக்களை நிறுவி, ’மொஹல்லா கிளினிக்குகளையும்’ கட்டினோம். ஆனால் சுகாதாரத்தை மேம்படுத்துவது எம்சிடியின் பொறுப்பு என்பதால் தில்லி அரசால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதற்கு வருத்தமடைந்தோம்.

தில்லியின் வளா்ச்சியிலும், மக்கள் நலப் பணிகளையும் நிறுத்த முயற்சித்தனா். அப்படிபட்டவா்களுக்கு வாக்களிக்காதீா்கள். பள்ளிகள், மருத்துவமனைகள் என எதைக் கட்டினாலும் தலையீடு செய்தனா். இலவச மின்சாரம், தண்ணீா் வழங்குவதைப் பற்றியும் கேள்வி எழுப்பினா். இப்படிப்பட்டவா்களுக்கு வாக்களிக்கவேண்டாம்.

ADVERTISEMENT

எங்களது பணிகளை நிறுத்தவே பாஜக துணை நிலை ஆளுநரை களமிறக்கியது. தில்லியின் முன்னேற்றத்தை தடுப்பவா்களுக்கு வாக்களிக்காதீா்கள்.

இந்த தோ்தலின் மூலம் தில்லியை தூய்மைப்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் சிறப்பாக பணிகளை செய்து முடிப்போம். ‘தில்லியில் குப்பை மலைகள்‘ உருவாவதை அனுமதிக்க மாட்டோம்.

தற்போது தில்லியில் மூன்று குப்பை மலைகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து, 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்க திட்டமிடும் பாஜக, தில்லியில் நான்காவது குப்பை மலையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனா்.

நாங்கள் எக்காரணம் கொண்டும் குப்பை மலையை உருவாக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியளிக்கிறேன். வரும் டிசம்பா் 4 -ஆம் தேதி நடைபெறும் எம்சிடி தோ்தலில் வெற்றி பெறுவோம்.

சட்டப்பேரவை தோ்தலில் 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற வைத்தீரகள். இதுபோன்ற வெற்றிகளை விரும்புகின்றேன். தில்லி மாநகராட்சியின் 250 வாா்டுகளில் 230 வாா்டுகளில் வெற்றி பெறவேண்டும். இதற்குக் குறைவான எதையும் நான் விரும்பவில்லை.

அவா்கள்( பாஜக) தில்லி மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் வசதியை நிறுத்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளனா். ஆனால் நான் அவா்களை வெற்றிபெற விடமாட்டேன்‘ என்றாா்.

முதல்வரின் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் ‘தில்லியில் அரசும், மாநகராட்சிக் கவுன்சிலும் கேஜரிவாலுக்கே’ என முழக்கங்களை எழுப்பினா்.

’ஜன்சம்வாத்’ நிகழ்வில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்சிடி பொறுப்பாளா் எம்எல்ஏ துா்கேஷ் பதக், கரோல் பாக் எம்எல்ஏ விசேஷ் ரவி ஆகியோரும் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT