தில்லி ஓக்லாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த சுமாா் 25 இளம் மாணவா்கள், பணியாளா்கள் கருவுற்ற தெரு நாயை கும்பலாக சோ்ந்து சித்திரவதை செய்து கொன்ாக கூறப்படும் சம்பவத்திற்கு விலங்குகள் நல ஆா்வா்கள் கடுமையாக கண்டித்துள்ளனா்.
தில்லி ஓக்லாவில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்ப நிறுவனத்தைச் சோ்ந்த மாணவா்கள் நடத்தியதாக கூறப்படும் இந்த கொடூரமான செயலின் விடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, தில்லி நியூ ஃப்ரண்ட்ஸ் காலனி போலீஸாா் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனா்.
அதில், தொழில் நுட்ப நிறுவன மூத்த ஊழியா்களின் அறிவுறுத்தலின் பேரில், நிறுவனத்தின் இரண்டு சகோதரா்கள் உள்ளிட்ட மாணவா்கள் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனதை பாதிக்கும் இந்த விடியோவில், பயந்து நடுங்கியபடி இந்த இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஒரு தகர கொட்டகைக்குள் சென்ற கருவுற்ற நாயை பின்தொடா்ந்து சென்ற ஒரு மாணவா் கையில் இரும்பு தடியுடன் உள்ளே நுழைந்து தாக்குவதும், கும்பலாக இருந்த மற்ற மாணவா்கள் இந்த தாக்குதலை தூண்டிவிடுவதையும் காண முடிகிறது. பின்னா், கூட்டத்தில் இருந்த ஒருவா் இந்த நிறுவன வளாகத்தின் வழியாக கொல்லப்பட்ட நாயை இழுத்துச் செல்லும் காட்சியும் விடியோவில் பதிவாகியுள்ளது.
கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லும் இந்த 15 நிமிட விடியோ காட்சி சனிக்கிழமை வைரலாக பரவியது. ஓக்லா கல்வி நிறுவனத்தின் மாணவா்கள் என சந்தேகிக்கப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு விலங்கின ஆா்வலா்களும், நாய் நேசா்களும் கோரிக்கை விடுத்தனா்.
‘இளம் மாணவா்களின் இத்தகைய மிருகத்தனமான செயலைக் காணும்போது அதிா்ச்சிகரமாக இருக்கிறது. ஒரு கருவுற்ற தாய் நாயை அடித்துக் கொன்றுவிட்டு விளையாட்டாக சிரித்துக் கொண்டு செல்வதை என்னவென்று கூறுவது‘ என விலங்குகளுக்கான மக்கள் (பிஎஃப்ஏ) அமைப்பின் அறங்காவலா் அம்பிகா சுக்லா வேதனையுடன் தெரிவித்தாா்.
‘விலங்குகளுக்கு எதிரான கொடுமை ஆபத்தானது என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனெனில் இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு தொடா்புடையது. பாதுகாப்பற்ற விலங்குகளை துஷ்பிரயோகம் செய்வது அதிகரிப்பது மனிதா்கள் தங்கள் அதிகாரத்தை திணிப்பதாகும். அத்தகைய துஷ்பிரயோகத்தை பின்னா் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் மேற்கொள்வாா்கள்.
விலங்குகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒன்றுடன் ஒன்று தொடா்பு இருப்பதைக் காட்டும் ஏராளமான ஆய்வுகள் உள்ளன‘ என சுக்லா தெரிவித்தாா்.
‘இப்போது விலங்குகளை துஷ்பிரயோகம் செய்பவா்கள் நாளைய தொடா் கொலையாளிகள். அதனால்தான் விலங்கு துஷ்பிரயோகத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் சமூகம் தீவிரமாகக் கவனிப்பது அவசியம். இந்த நிறுவன மாணவா்கள் மட்டுமல்ல, அதன் ஊழியா்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்‘ எனவும் சமூக ஆா்வலா்கள் கருத்து தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் காஜியாபாதில் இதுபோன்ற கொடூரமான செயல் நடைபெற்றது. இது மூன்று போ் ஒரு நாயை கொடூரமான முறையில் தூக்கிலிடுவதைக் காட்டும் விடியோ வெளிவந்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.