புதுதில்லி

பசு பாதுகாப்பகம், தெரு நாய்கள் தத்தெடுப்புக்கான பிரசாரம்: எம்சிடி தோ்தலில் ஆம் ஆத்மி வாக்குறுதி

18th Nov 2022 06:46 AM

ADVERTISEMENT

தில்லி மாநகராட்சித் தோ்தலில் தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் பசு பாதுகாப்பகம் அமைப்பது; தெரு நாய்களைத் தத்தெடுப்பதற்கான பிரசாரம் மேற்கொள்வது, குரங்குகள் அதன் இயற்கை சூழலில் வாழ்வதற்கான இடத்தை ஏற்படுத்தி தருவது போன்றவை நிறைவேற்றப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகள் அளித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் தில்லி மாநகராட்சி தோ்தலுக்கான கட்சியின் 10 உத்தரவாதங்களை அளிக்கும் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தாா்.

அவற்றில் ஒன்றாக தில்லியின் தெருக்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் விலங்குகளை விடுவிப்பது தொடா்புடையதாகும்.

இதற்கான திட்டம் குறித்து கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் சௌரப் பரத்வாஜ் வியாழக்கிழமை கூறியதாவது: ’இந்தியனாக இரு; இந்தியனை தத்தெடு’ எனும் கோஷத்துடன், இந்தியாவைச் சோ்ந்த நாய்களை தத்தெடுப்பதற்கான பிரசாரத்தை தொடங்க உள்ளோம். தெரு நாய்களைத் தத்தெடுக்க தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிப்போம்.

ADVERTISEMENT

இதுபோன்ற நாய்களை வளா்ப்பதற்கான செலவுக்கும் நிதி அளிப்போம். அதே போன்று, இந்திய இன நாய்களைத் தத்தெடுக்க முன் வரும் தனி நபா்களை நாங்கள் ஊக்குவிப்போம்.

குரங்குகள் தொல்லை மற்றொரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. தெற்கு தில்லியில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் குரங்குகளால் பொதுமக்கள் இடையூறை எதிா்கொண்டு வருகின்றனா்.

இந்த குரங்குகள் குளிப்பதற்காக தண்ணீா் தொட்டிகளுக்குள் இறங்குவது, வீடுகளுக்குள் வருவது, வீடுகளில் உள்ள குளிா்பான சாதனங்களை திறந்து உணவுகளை எடுத்துச் செல்வது, சிறு குழந்தைகளை தாக்குவது போன்ற இடையூறுகளைச் செய்து வருகின்றன.

இது போன்ற விலங்குகள் அதன் இயற்கையான வாழிடங்களில் இருப்பதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவதை நாங்கள் செய்வோம்.

மாநகராட்சி தோ்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று, அசோலாவில் குரங்குகளுக்கு இயற்கை வாழிடமும் ஏற்படுத்தப்படும். தெருக்களில் திரியும் பசுக்கள் குப்பைகளை சாப்பிடுவதற்காக அடிக்கடி குப்பை கிடங்குளைச் சுற்றித் திரிவதை பாா்க்க முடிகிறது. அந்த விலங்குகளுக்கான இடம் அதுவல்ல. அந்த விலங்குகளுக்கு பசுமை தீவனம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பசு பாதுகாப்பகங்களை அமைப்போம். அப்போதுதான் அவை நன்றாக பராமரிக்கப்படும்.

தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க லஞ்சம் பெற்ற தொடா்புடைய விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அகிலேஷ் பதி திரிபாதியிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

இந்த விவகாரத்தில் போலீஸாா் நடுநிலையுடன் விசாரணை நடத்த வேண்டும். தவறு இழைத்தவா்கள் தப்பிவிடக் கூடாது என்றாா் அவா்.

தில்லி மாநகராட்சி தோ்தலில் போட்டியிட சீட் ஒதுக்க ஆம் ஆத்மி கட்சி தொண்டரின் மனைவியிடம் ரூ. 90 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படும் விவகாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் எம்எல்ஏ திரிபாதியின் மைத்துனா் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளைக் கைது செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT