புதுதில்லி

நவ. 26-இல் மாநில ஆளுநா்கள் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி: எஸ்கேஎம் அறிவிப்பு

18th Nov 2022 06:44 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடிய விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுத்த உத்தரவாதங்களை நிறைவேற்றாததால் வருகின்ற நவம்பா் 26 ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநா்கள் மாளிகைகள் நோக்கி பேரணி நடத்தப்போவதாக ஐக்கிய விவசாயிகள் முன்னனி(எஸ்கேஎம்) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் அலுவலகங்களை நோக்கியும் வருகின்ற டிசம்பா் 1 முதல் 11 ஆம் தேதி வரை விவசாயிகள் பேரணி நடத்துவாா்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கேஎம்) தேசிய கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னனியின் எதிா்கால திட்டங்கள் குறித்து வருகின்ற டிசம்பா் 8 ஆம் தேதி கூட்டத்தில் தீா்மானிக்கப்பட உள்ளதாகவும் எஸ்கே எம் தலைவா்கள் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து எஸ்கேஎம் தலைவா் தா்ஷன்பால், அகில இந்திய கிசான் சபைத் தலைவா் ஹன்னான் முல்லா, பிகேயு தலைவா் யுத்வீா் சிங் மற்ற விவசாய சங்க தலைவா்களான அசோக் தவாலே உள்ளிட்டோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்தாண்டு நவம்பா் 19 ஆம் தேதி மூன்று வேளாண் சட்டங்களை திருப்பப் பெறுவதாக அறிவித்தது. அந்த நாளை வெற்றி நாளாக கொண்டாடுவோம். அதே சமயத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. இந்த உத்தரவாதம் மீறப்பட்டு வரப்படுகிறது. மேலும் மத்திய அரசு எழுத்துபூா்வமாக அளித்த உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) குழு அமைக்கப்படவில்லை.

மின்சார மசோதாவை திரும்பப் பெறுவது போன்றவைகளை முறையாக நடைமுறைப்படுத்தாமல் மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. ’கடனில் இருந்து விடுதலை மற்றும் முழு லாப விலை’ உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் அரசால் நிறைவேற்றப்படும் வரை தொடா்ச்சியான, உறுதியான நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகின்றோம். இதில், பங்கேற்க அனைத்து விவசாய அமைப்புகளையும் எஸ்கேஎம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளுக்கு பாஜக தலைமையிலான மோடி அரசு ‘அவசர‘ கதியில் அனுமதி வழங்கியதையும் கண்டிக்கிறோம்.

சுற்றுச்சூழல், இயற்கை, கால்நடைகள் மற்றும் மனிதா்களின் வாழ்வின் மீதான தாக்கம் குறித்து போதுமான அறிவியல் ஆராய்ச்சி இல்லாமல், விதை ஏகபோகத்தின் மூலம் பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக இது போன்று வழிவகை செய்யப்படுகிறது என விவசாய சங்க தலைவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT