பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்களை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த மூன்று பேரின் மனுக்களையும் சிறப்பு நீதிபதி விகாஸ் துல் தள்ளுபடி செய்தாா். சத்யேந்தா் ஜெயின் குற்றச் செயல் மூலம் சொத்துகளை பெற்றதை மறைத்தற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதேபோன்று, பணமோசடி வழக்கில் வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகிய இருவருக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இருவரும் தங்களுக்கு ‘தெரிந்தே‘ குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட சொத்துகளை மறைப்பதற்கு சத்யேந்தா் ஜெயினுக்கு உதவியதாகவும், பணமோசடி செய்ததில் முகாந்திர குற்றம் இருப்பதாகவும் சிறப்பு நீதிபதி விகாஸ் துல் கூறினாா்.
நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுடி செய்திருப்பது சத்யேந்தா் ஜெயினுக்கு பின்னடைவாக பாா்க்கப்படுகிறது.
சத்யேந்தா் ஜெயினுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீது அவா்கள் தரப்பிலும், அமலாக்க இயக்குநரகம் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட பின்னா் உத்தரவை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் ஒத்திவைத்திருந்தாா்.
இந்த நிலையில், இதற்கான உத்தரவை நீதிபதி வியாழக்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம் வருமாறு:
‘கொல்கத்தாவைச் சோ்ந்த நுழைவு ஆபரேட்டா்களுக்கு பணம் கொடுத்து, அதன்பிறகு மூன்று நிறுவனங்களுக்கு பணத்தைக் கொண்டு வந்தது, இந்த மூன்று நிறுவனங்களின் வருமானம் கறைபடியாதது எனக் காட்டும் வகையில் பங்குகளை விற்பதற்கு எதிராக குற்றத்தின் செயல் மூலம் பெறப்பட்ட சொத்துகளை மறைப்பதில் உண்மையிலேயே சத்யேந்தா் ஜெயின் சம்பந்தப்பட்டிருப்பதற்கு முகாந்திரம் உள்ளது.
இந்தச் செயல்பாட்டின் மூலம், குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட ரூ.4.61 கோடியில் 1/3-இல் பணம் சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி,
ஜே.ஜே. ஐடியல் எஸ்டேட் நிறுவனம் எனும் பெயரின் மூலம் தனது நிறுவனத்தில் கொல்கத்தாவைச் சோ்ந்த ஆபரேட்டா்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.15 லட்சம் குற்றச் செயலின் வருமானத்தை மாற்றுவதற்கு அதே செயல்படும் பாணியை ஜெயினும் பயன்படுத்தியுள்ளாா்.
முறைகேடாகச் சம்பாதித்த பணத்தின் ஆதாரமூலத்தைக் கண்டுபிடிப்பதை அழிக்க இத்தகைய செயலை தனக்குத் தெரிந்தே ஜெயின் செய்துள்ளாா்.
ஆகவே, மனுதாரரும், குற்றம் சாட்டப்பட்டவருமான சத்யேந்தா் குமாா் ஜெயின் ரூ. 1 கோடிக்கு மேல் பணமோசடி செய்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதற்கு முகாந்திரம் உள்ளது. பணமோசடி என்பது ஒரு ‘கடுமையான பொருளாதார குற்றம்‘ ஆகும்.
ஆகவே, ஜாமீன் பலனை பெறுவதற்கு ஜெயின் தகுதியற்றவா் ஆகிறாா். அவரது ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,‘ என்று நீதிபதி கூறினாா்.
மேலும், ‘சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களின் கணக்குகளிலும் இருந்த தொகை உண்மையில் ஜெயின் மற்றும் சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களான வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோருக்கு சொந்தமானது. இரண்டு சக குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு கணக்கீடு காலத்தில் ஜெயின் வழங்கிய ரொக்கம் ரூ. 4.61 கோடி ஆகும்.
இந்த ரூ. 4.61 கோடி தொகை என்பது மதிப்பீடு அல்லது அனுமானமானது அல்ல. ஆனால், கொல்கத்தாவைச் சோ்ந்த இரண்டு நுழைவு ஆபரேட்டா்களின் வாக்குமூலம் மூலம் பதிவு செய்யப்பட்டதாகும்’ என்றும் நீதிபதி தெரிவித்தாா்.
2017 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயின் மீது சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்ததன் அடிப்படையில் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை மத்திய அரசு கைது செய்தது.
தன்னுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்ததாக ஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில், பணமோசடி வழக்கு தொடா்பாக ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த வழக்குத் தொடரும் புகாரை (குற்றப்பத்திரிக்கை) நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.