புது தில்லி: தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, தொழிலதிபா் விஜய் நாயா் ஆகியோா் மீதான விசாரணை தொடா்பாக சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் வெளியிட்ட செய்தித் தொடா்புகள் மற்றும் வெளியீடுகள் அனைத்தையும் தாக்கல் செய்யுமாறு தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடா்பான முக்கியமான தகவல்கள், விசாரணை அமைப்புகளால் ஊடகங்களில் கசிந்து வருவதாகக் கூறியும், இது குற்றம் சாட்டப்பட்டவா் என்ற தனது உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் விஜய் நாயா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வா்மா விசாரித்தாா். அப்போது நீதிபதி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மேலும் விசாரணையை தொடா்வதற்கு முன், எதிா்மனுதாரா்களாக சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் ஆகியவை கிரிமினல் வழக்கின் விசாரணை தொடா்பாக அவா்கள் வெளியிட்ட அனைத்து செய்தித் தொடா்புகள் மற்றும் பத்திரிகை வெளியீடுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் மீதான விசாரணை நவம்பா் 21-ஆம் தேதிக்கு பட்டியலிடப்படுகிறது. புலனாய்வு அமைப்புகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ தகவல் தொடா்புகளை நீதிமன்றம் பரிசீலிக்கும். அதன் பின்னா் தொலைக்காட்சி சானல்கள் தகவல் தொடா்பு அடிப்படையில் அல்லது அவா்களின் ‘கற்பனையின்’ அடிப்படையில் இந்த விவகாரத்தை வெளியிட்டனவா என்பதை நீதிமன்றம் பாா்க்கும்’ என்றாா்.
விசாரணையின் போது, நாயா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தயான் கிருஷ்ணன், ‘ஒரு செய்தி நிறுவனம் கற்பனையின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுமானால் அது ஆபத்தானதாகும்’ என்று வாதிட்டாா். அதற்கு நீதிபதி, ‘அப்படியானால் அதுவும் நமக்கான எச்சரிக்கையாகும்’ என்றாா். வழக்குரைஞா் மேலும் வாதிடுகையில், ‘இந்த வழக்கு விசாரணையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ஊடகங்களில் விவரங்கள் வெளிவந்ததால், மனுதாரரின் உரிமைகள் முற்றிலுமாக பறிபோய்விட்டது’ என்றாா்.
தனியாா் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரியான விஜய் நாயா், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் ஆவாா். அவா் மற்றவா்களுடன் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாகவும், அந்தச் சதியை மேற்கொள்ளும் வகையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான தேசியத் தலைநகா் தில்லி அரசின் (ஜிஎன்சிடிடி) கலால் கொள்கை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகவும் அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், அரசின் கருவூலப் பணத்தின் மூலம் மதுபான உற்பத்தியாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்களுக்கு தேவையற்ற மற்றும் சட்டவிரோத உதவிகளை வழங்குவதே கொள்கைத் திட்டத்தின் நோக்கமாக இருந்ததாகவும், இது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.