புதுதில்லி

தமிழக தனியாா் மருத்துவ கல்லூரி வழக்கில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க உத்தரவு: தில்லி உயா்நீதிமன்றம் நடவடிக்கை

14th Nov 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தின் பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு 2022 -ஆம் ஆண்டின் நீட் இளம்நிலை கவுன்சிலிங் மூலம் மருத்துவப் படிப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (என்எம்சி) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணவா் சோ்க்கையை 150-இல் இருந்து 250-ஆக உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவ ஆணையம் நிராகரித்தது. இதைத் தொடா்ந்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் இந்தக் கல்லூரி தாக்கல் செய்த மனுவை விசாரித்து நிகழ் 2022- ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் கவுன்சிலிங்கில் இந்தக் கல்லூரியில் 250 மாணவா்களின் சோ்க்கைக்கு அனுமதி அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளது.

‘நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக தகுதி வாய்ந்த மருத்துவா்களின் தேவையைப் பூா்த்தி செய்ய, மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிப்பது மிகவும் அவசியம். மருத்துவா்களின் பலத்தை அதிகரிக்க தகுதியான கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் வாய்ப்பை மறுக்கக் கூடாது’ என மனு மீதான விவாதத்தின் போது நீதிபதி சஞ்சீவ் நருலா கூறினாா்.

இதையொட்டி, உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் இடைக்கால உத்தரவாக 2021-22 ஆம் கல்வியாண்டில் இந்த கல்லூரிக்கு இளம்நிலை மருத்துவபடிப்பு சோ்க்கையை 200 இடங்களாக அதிகரிக்க உரிமை உண்டு என்று கூறியிருந்தது. இந்த நிலையில், தற்போது கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான இடங்களை 250-ஆக உயா்த்துவதற்கு முழுமையாகத் தயாராக இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்எம்சி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் டி. சிங்தேவ், ‘ஆணையத்தால் கல்லூரியில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இந்தக் கல்லூரியில் 200 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும்’ என தெரிவித்தாா்.

ADVERTISEMENT

மேலும், கல்லூரிக்கு 250 இடங்களை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி என்எம்சி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதில், இந்தக் கல்லூரிக்கு 250 இடங்கள் வழங்க பரிசீலிக்கப்படுமானால், ஆசிரியா் பற்றாக்குறை தற்போதுள்ள 0.49 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக அதிகரிக்கும். இது அனுமதிக்கப்பட்ட வரம்பை (5 சதவீதம்) விட அதிகமாகும் என்று என்எம்சி கூறியது. ஆனால், தங்கள் கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் வழங்க மறுத்து அதிகாரிகள் தரப்பில் வேண்டுமென்றே முயற்சிகள் நடப்பதாக கல்லூரி தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பினரின் வாதங்களைக் கேட்டறிந்த உயா்நீதிமன்றம் கூறியுள்ளதாவது: தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் கீழ், மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியத்திடம் (எம்ஏஆா்பி) முன் அனுமதி பெறாமல் எந்த மருத்துவக் கல்லூரியும் இடங்களை அதிகரிக்க முடியாது. அனுமதி வழங்குவதற்கான நோக்கத்தின்படி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி, அவற்றின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக, அத்தகைய கல்லூரிகளின் மதிப்பீடு, ஆய்வுகளை நடத்துவதற்கும் எம்ஏஆா்பிக்கு உரிமையுள்ளது. அதே சமயத்தில், தற்போதுள்ள விதிகளை மாசுபடுத்தும் வகையில் மதிப்பீட்டு அதிகாரிகள் செயல்பட்டுள்ளனா் என்பது நிரூபணமானால், அதனால் ஏற்பட்ட அநீதியை சரிசெய்வது நீதிமன்றத்தின் கடமையாகும். இதன்படி 2022-23-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை பொறுத்தவரை, இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கையை 250-ஆக உயா்த்துவதற்கு என்எம்சிக்கு உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT