புதுதில்லி

தில்லி வன்முறை வழக்கு: மனுக்கள் மீது பதிலளிக்க அரசியல் தலைவா்களுக்கு உயா்நீதிமன்றம் அவகாசம்

31st May 2022 06:31 AM

ADVERTISEMENT

தில்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைக்கு வித்திட்ட ஆத்திரத்தை தூண்டும் வெறுப்புணா்வு பேச்சுக்கள் விவகாரத்தில் வழக்குப்பதிவு மற்றும் விசாரணை செய்யக் கோரி தாக்கலான மனுக்களில் தங்களையும் ஒரு தரப்பாக சோ்க்கக் கோரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மற்றும் பிற நபா்கள் பதில் தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லியில் 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய விவகாரத்தில் பல்வேறு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை நீதிபதி சித்தாா்த் மிருதுல் தலைமையிலான அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், சில அரசியல் கட்சிகளின் தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் சிலரின் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கறிஞா்கள் ஆஜராகியுள்ளனா். பிறா் நபா்கள் தொடா்ந்து ஆஜராகவில்லை. இதனால், முன்மொழியப்பட்ட எதிா்மனுதாரா்களுக்கு இந்த வழக்கின் உரிய ஆவணங்களின் நகல்களை அளிக்க வேண்டும்.

முன்மொழியப்பட்ட மனுதாரா்கள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் தாக்கல் செய்ய சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்று நீதிபதி அமா்வு தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த விவகாரத்தில் தாக்கலான இரண்டு மனுக்கள் மீது பதிலளிக்க பாஜகவைச் சோ்ந்த அனுராக் தாக்குா், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் ஷேக் முஸ்தபா என்ற மனுதாரா் தாக்கல் செய்த ஒரு மனுவில், பாஜக தலைவா்கள் அனுராக் தாக்குா், கபில் மிஸ்ரா, பா்வேஷ் வா்மா மற்றும் அபய் வா்மா ஆகியோருக்கு எதிராக வெறுக்கத்தக்க உரையாற்றி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அதேபோன்று மனுதாரா் ‘லாயா்ஸ் வாய்ஸ்’ அமைப்பு மூலம் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில், வெறுப்புணா்வு பேச்சில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானத்துல்லா கான், ஏஐஎம்ஐஎம் தலைவா் அக்பருதீன் ஒவைசி, முன்னாள் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ வாரிஸ் பதான், மெஹ்மூத் பிரச்சா, ஹா்ஸ் மந்தா், முப்தி மெஹ்மூத் இஸ்மாயில், ஸ்வர பாஸ்கா், உமா் காலித், பிஜி கோல்ஸே பாட்டீல், முன்னாள் பாம்பே உயா்நீதிமன்ற நீதிபதி மற்றும் பிறகு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வழக்குரைஞா்கள் சினேகா முகா்ஜி, சித்தாா்த் சீம், ஃபரூக் ஆகியோா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கையில், மனுவில் பெயரிடப்பட்டுள்ள அரசியல் தலைவா்கள் வெறுக்கத்தக்க உரையாற்றி, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஆா்ப்பாட்டக்காரா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாயா்ஸ் வாய்ஸ் அமைப்பின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சத்யா ரஞ்சன் ஸ்வைன், அா்ச்சனா சா்மா ஆகியோா் தங்களது மனுவில் தெரிவிக்கையில், பொது உரையானது பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒரு கருவியாக இருக்க முடியாது.இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாவிட்டால் தவறிழைத்தவா்கள் ஊக்குவிக்கப்படுவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் பின்னணியில் வெறுக்கத்தக்க உரையை அளித்ததாகக் கூறப்படும் நபா்களுக்கு எதிரான நடவடிக்கை தவிர, இதர மனுக்களில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்; வன்முறைகளில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கைது செய்யப்பட்ட மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபா்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீது காவல்துறை தாக்கல் செய்துள்ள பதிலில், ‘இந்த விவகாரத்தில் குற்றப்பிரிவின்கீழ் ஏற்கனவே மூன்று சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தற்போது வரை எந்த ஆதாரமும் இல்லை.மேலும் அரசியல் கட்சித் தலைவா்கள் வன்முறையில் கலந்து கொண்டதாகவோ அல்லது தூண்டியதாகவோ தற்போது வரை எந்த ஆதாரமும் வெளிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தின் அடுத்த விசாரணை ஜூலை 4 ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT