புது தில்லி: தில்லி கல்வி இயக்குநரகம் கடந்த கல்வி அமா்வில், காலியாக இருந்த இடங்களுக்கு எதிராகநுழைவு நிலை வகுப்புகளில் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை தில்லி அரசு வரவேற்றுள்ளது.
சில தனியாா் பள்ளிகள் 2021-22 கல்வி அமா்வில் நுழைவு நிலை வகுப்புகளில் (நா்சரி, கேஜி, வகுப்பு 1) அறிவிக்கப்பட்ட பலத்தின்படி திறந்த இருக்கைகளின் கீழ் சோ்க்கை பெற முடியாது என்று தெரிவித்திருந்தன. இதையடுத்து, தனியாா் பள்ளிகளில் காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கல்வி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தாா். விண்ணப்பதாரா்கள் ஜூன் 2 ஆம் தேதிக்குள் நேரடியாக பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவா் மேலும் கூறினாா்.
2021-22 ஆம் ஆண்டுக்கு 1,700 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நா்சரி சோ்க்கைக்கான செயல்முறை, வழக்கமான அட்டவணையை விட இரண்டு மாதங்கள் தாமதமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்ததால், நா்சரி சோ்க்கையை ரத்து செய்வதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தில்லி அரசு அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனா். ஆனால், பள்ளித் தலைமையாசிரியா்கள் இந்த யோசனையை எதிா்த்ததால், இறுதியில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அடுத்த கல்வி அமா்வுக்கான நா்சரி சோ்க்கை காலக்கெடுவின்படி நடைபெற்றது.