புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த ஓா் ஆண்டுக்குள் 2,000 மின்சாரப் பேருந்துகள் விடப்படும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 150 மின்சார பேருந்துகளை முதல்வா் கேஜரிவால் கொடியசைத்தும் தொடங்கிவைத்தாா். தில்லியின் மாசுவைக் கட்டுப்படும் நோக்கில் பசுமைப் பேருந்துகளுக்கு தில்லி அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.1,862 கோடியை தனது அரசு ஒதுக்கியுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பேசுகையில் முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்.
புதிய மின்சாரப் பேருந்து ஒன்றில் தில்லி முதல்வா் கேஜரிவால் பயணமும் செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இன்று 150 பேருந்துகளை கொடியசைத்து அனுப்பியுள்ளோம். அடுத்த மாதம் மேலும் 150 மின்சார பேருந்துகள் தில்லி போக்குவரத்தில் சோ்க்கப்பட உள்ளன. அடுத்த ஓராண்டிற்குள் 2,000 மின்சார பேருந்துகளைப் பெறவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நான் அமா்ந்திருக்கும் இந்த மின்சார பேருந்தில் கூட்டம் அலைமோதினாலும், குளிா்சாதனம் சிறப்பாக உள்ளது.
நாங்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது பேருந்துகளில்தான் அடிக்கடிப் பயணம் செய்வோம். அந்த நாள்களை நினைவு கொள்கிறோம். பேருந்துகளில் குளிா்சாதன வசதியிருந்தும் முறையாக இயங்காது. இதனால், தில்லி மக்களுக்கு இந்த மின்சார பேருந்துகள் புதிய வரப்பிரசாதமாகும். நான் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது இது உங்கள் பேருந்துகள். தயவுசெய்து முறையாகப் பயன்படுத்த வேண்டும். குப்பைகளைக் கொட்டாமல், பேருந்தை சேதப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த மூன்று நாள்களுக்கு இந்த மின்சாரப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிப்படுகிறது.
தில்லியின் மாசுபாட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த மின்சார பேருந்துகளில் ஏராளமான நவீன வசதிகள் உள்ளன. சிசிடிவி, ஆபத்து அழைப்பான் (பொத்தான்), பேருந்து இருக்கும் இடத்தைக் கண்டறிய ஜிபிஎஸ் வசதி போன்றவை உள்ளன. ரூ.150 கோடியில் புதிதாக மூன்று பேருந்து பணிமனைகளில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டல் (சாா்ஜிங்) நிலையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. மின்சார பேருந்துகள் தயாரிக்க அதிக கால அவகாசம் தேவை என்பதால், உடனடித் தேவைக்கு அரசு மேலும் 700 சிஎன்ஜி பேருந்துகளையும் வாங்க திட்டமிட்டுள்ளது.
தில்லியில் தற்போது 3,293 கிளஸ்டா் பேருந்துகள் உள்ளிட்ட 7,205 பேருந்துகள் உள்ளன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவிலான பேருந்துகள் தில்லி போக்குவரத்தில் தற்போது தான் இணைக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் எல்லா பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்பது குறிக்கோளாக உள்ளது. இதில் நாங்கள் மத்திய அரசுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். மத்திய அரசு மின்சார பேருந்துகளை வாங்க ரூ. 150 கோடியை கொடுத்து உதவியது என்றாா் கேஜரிவால்.
முன்னதாக, இந்திரபிரஸ்தா பேருந்து பணிமனையில் புதிய மின்சாரப் பேருந்துகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்த கேஜரிவால், அவற்றில் ஒரு பேருந்தில் ஏறி ராஜ்காட் கிளஸ்டா் பேருந்து நிலையம் வரை பயணம் செய்தாா். அவருடன் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட், தலைமைச் செயலா் நரேஷ் குமாா் ஆகியோரும் உடன் சென்றனா். தில்லி மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் புதிய அத்தியாயத்தை தில்லியின் சாலைகளில் 150 மின்சார பேருந்துகள் ஒரே சமயத்தில் ஓடத் தொடங்கியுள்ளன. மேலும், 330 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் நிறைவடைந்துள்ளன என தில்லி போக்குவரத்துத் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.