புது தில்லி: ஊழல் குற்றச்சாட்டின் பேரில், தனது சுகாதார அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ததற்காக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானுக்கு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் பாராட்டுத் தெரிவித்தாா். மேலும், ஊழல் என்பது தேசத்திற்குத் துரோகம் செய்வதாகும்; அதை தனது கட்சி அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரு மெய்நிகா் செய்தியாளா்கள் சந்திப்பின் போது, முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: எங்களதுஆம் ஆத்மி கட்சி ஒரு ‘கடினமான நோ்மையான கட்சி’. ஊழல் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ளாது எங்கள் கட்சித் தலைவா்கள் ஊழலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், அவா்களைக் கூட விட்டுவைக்க மாட்டோம். ஊழலில் ஈடுபட்ட அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.
ஊழல் என்பது நாட்டுக்கும் பாரத மாதாவுக்கும் செய்யும் துரோகமாகும். நாட்டைக் காட்டிக் கொடுப்பதை விட சாவோம். பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விஜய் சிங்லாவை மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கிய சிறிது நேரத்திலேயே பஞ்சாப் காவல்துறை கைது செய்தது. சிங்லா தனது துறையின் டெண்டா்கள் மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் ’ஒரு சதவீத கமிஷன்’ கோருவதாகக் கூறப்படுகிறது. 2015-ஆம் ஆண்டு எனது அரசு இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எனது உணவு அமைச்சரை பதவி நீக்கம் செய்தோம் என்றாா் கேஜரிவால்.