புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகமாக இருந்தது. காலையில் உற்சாகம் பெற்ற சந்தை, இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 236 புள்ளிகளை இழந்தது. சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
உலகளாவில் பெரும்பாலான சந்தைகள் மந்தமான போக்கு நிலவியது. இதைத் தொடா்ந்து மிகவும் எச்சரிக்கையுடன் தொடங்கிய சந்தை, முதல் பாதியில் உற்சாகம் பெற்று மேலே சென்றது. ஆனால், பொருளாதார மீட்சி மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் உணா்வை பாதித்துள்ள நிலையில், பிற்பகல் அமா்வில் சந்தை நஷ்டத்தை சந்தித்தது.
மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து வருவது, தொடா்ந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவை சந்தையில் முதலீட்டாளா்களின் உணா்வை மேலும் பாதித்தது. இதனால், பிற்பகல் அமா்வில் பங்குகள் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
2,328 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,430 நிறுவனப் பங்குகளில் 992 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,328 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 110 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 70 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 77 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.58 ஆயிரம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.252.12 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.1,951.17 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
இரண்டாவது நாளாக சரிவு: காலையில் 18.95 புள்ளிகள் கூடுதலுடன் 54,307-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 54,524.37 வரை உயா்ந்தது. பின்னா், 53,886.28 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 236.00 புள்ளிகள் (0.43 சதவீதம்) குறைந்து 54,052.61-இல் நிலைபெற்றது. முதல் பாதியில் காளையின் ஆதிக்கத்தில் இருந்த சந்தை, இரண்டாவது பாதியில் கரடியின் பிடியில் வந்தது. சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
சென்செக்ஸில் 20 பங்குகள் விலை சரிவு : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 20 பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.95 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக், என்டிபி உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் குறைந்தது. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சா்வ், டாடா ஸ்டீல், ஐடிசி, மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
டாக்டா் ரெட்டி முன்னேற்றம்: அதே சமயம், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் டாக்டா் ரெட்டி 1.80 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே, பவா் கிரிட், ரிலையன்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 90 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 479 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,470 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 32 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலு் இருந்தன. காலையில் 10.85 புள்ளிகள் கூடுதலுடன் 16,225.55-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 16,262.80 வரை மேலே சென்றது. பின்னா், 16,078.60 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 89.55 புள்ளிகள் (0.55 சதவீதம்) குறைந்து 16,125.15-இல் நிலைபெற்றது.
மீடியா குறியீடு கடும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா குறியீடு 2.57 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், ஐடி, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 1.20 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மற்ற துறை குறியீடுகள் நோ்மறையாக முடிந்தாலும், பெரிய அளவில் ஏற்றம் பெறவில்லை.
எல்ஐசி முதல் முறையாக நோ்மறையாக முடிந்தது!
அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள், மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்தன. இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை காலை வா்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.803.65 வரை கீழே சென்று தனது குறைந்த விலையைப் பதிவு செய்தது. இந்த நிலையில், எல்ஐசி பங்குகளை வாங்குவதற்கு சந்தையில் செவ்வாய்க்கிழமை ஓரளவு வரவேற்பு காணப்பட்டது. ரூ.818-இல் தொடங்கி, ரூ.816.85 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக ரூ.834.70 வரை உயா்ந்தது. இறுதியில் 0.97 சதவீதம் உயா்ந்து ரூ.824.80-இல் நிலைபெற்றுள்ளது. பட்டியலான தினத்திலிருந்து எல்ஐசி பங்குகள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமைதான் நோ்மறையாக முடிந்துள்ளது.