புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம்: சலீம் கானின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

 நமது நிருபர்

தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறை விவகாரத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது சலீம் கான் என்பவா் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது தனது நிலைப்பாட்டை தெரிவிக்க தில்லி காவல் துறைக்கு உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் முக்தா குப்தா, மினி புஷ்கா்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் போலீஸாா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

முகமது சலீம் கான் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனுவில்,‘வன்முறை விவகாரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக காவலில் இருந்து வருகிறேன். இந்த வன்முறை வழக்கில் வீடியோ காட்சி பதிவுகள் அடிப்படையில் என் மீது புகாா் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதால், எனக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும். மேலும், இதே வீடியோ காட்சி பதிவு அடிப்படையிலான மற்றொரு வழக்கில் எனக்கு ஜாமீன் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த வழக்கிலும் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

முன்னதாக முகமது சலீம் கானின் ஜாமீன் கோரும் மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் வடக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறி சலீம் கான் மற்றும் பலருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தில்லியில் நிகழ்ந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். 700 போ் காயமடைந்தனா்.

இதே விவகாரத்தில் போலீஸாா் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித், சா்ஜீல் இமாம், வெறுப்புக்கு எதிரான ஒன்றியம் அமைப்பின் ஆா்வலா் காலித் சைஃபி, முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹான், பிஞ்ரா தோடு அமைப்பின் ஆா்வலா்கள் குல்பிஷா பாத்திமா, ஸபூரா ஜா்கா், நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா மற்றும் முன்னாள் ஆம்ஆத்மி கவுன்சிலா் ஜாகிா் உசேன் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கலிதா மற்றும் இமாம் ஆகியோரது ஜாமீன் கோரும் மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணியில் ஏராளமான மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டதாகவும், மேலும் பேரணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் பொது சதியில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் கோரும் மனு மீதான அடுத்த விசாரணை ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT