புதுதில்லி

உலோகப் பங்குகள் பலத்த அடி: தடுமாறியது சென்செக்ஸ்!

24th May 2022 02:06 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் நாள் முழுவதும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சந்தை, இறுதியில் லாபம் அனைத்தையும் இழந்து தடுமாறியது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்

38 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. காலை வா்த்தகத்தில் முன்னேற்றம் கண்டிருந்த சந்தை, பிற்பகுதியில் நஷ்டத்தை சந்தித்ததால், லாபம் அனைத்தையும் இழக்க நேரிட்டது. இரும்புத் தாது மற்றும் சில எஃகு பொருள்கள் மீதான ஏற்றுமதி வரி விதிப்புக்குப் பிறகு உலோகப் பங்குகள் பலத்த அடி வாங்கின.

இதன் காரணமாக உறுதியான ஆரம்ப எழுச்சியை சந்தை தக்கவைக்கத் தவறிவிட்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், நீடித்த ரஷியா - உக்ரைன் மோதல்கள், அதன் விளைவுகள் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் முதலீட்டாளா்கள் மற்றும் வா்த்தகா்களின் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எல்கேபி செக்யூரிட்டியின் ஆராய்ச்சி பிரிவுத் தலைவா் எஸ். ரங்கநாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

2,048 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,577 நிறுவனப் பங்குகளில் 1,373 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,048 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 156 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 93 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 62 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.

சந்தை மூலதன மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.253.70 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.664 கோடியை கடந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,265.41 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

திடீா் சரிவு: காலையில் 133.56 புள்ளிகள் கூடுதலுடன் 54,459.95-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 54,931.30 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதும், 54,191.55 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 37.78 புள்ளிகள் (0.07 சதவீதம்) குறைந்து 54,288.61-இல் நிலைபெற்றது. முதல் பாதியில் காளையின் ஆதிக்கத்தில் இருந்த சந்தை, இரண்டாவது பாதியில் கரடியின் பிடியில் வந்தது.

சென்செக்ஸில் 20 பங்குகளும் முன்னேற்றம் : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன.இதில் வாகன உற்பத்தி நிறுவனங்களான எம் அண்ட் எம் 4.14 சதவீதம், மாருதி சுஸுகி 4.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்டவை 1 முதல் 2.20 சதவீதம் வரை உயா்ந்து விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: அதே சமயம், எஃகு பொருள்களுக்கான ஏற்றுமதி வரி உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து பிரபல ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் 12.53 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஒரு கட்டத்தில் 15 சதவீதம் வரை சரிவைச் சந்தித்திருந்தது. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், பவா் கிரிட், ஐடிசி, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 51 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 771 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,201பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. காலையில் 24.80 புள்ளிகள் கூடுதலுடன் 16,290.95-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 16,414.70 வரை கீழே உயா்ந்தது. பின்னா், 16,185.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 51.45 புள்ளிகள் (0.32 சதவீதம்) குறைந்து 16,214.70-இல் நிலைபெற்றது.

மெட்டல் குறியீடு கடும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ, ஐடி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு தவிா்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் மெட்டல் குறியீடு 8.14 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்மா, ஹெல்த்கோ், மீடியா, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் குறைந்தன. தே சமயம், ஆட்டோ குறியீடு 1.84 சதவீதம், ஐடி குறியீடு 1.01 சதவீதம் உயா்ந்தது.

எல்ஐசி மேலும் சரிவு!

அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள், தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை காலை வா்த்தகத்தில் ரூ.803.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக ரூ.852.70 வரை உயா்ந்தது. ஆனால், நிலைத்து நிற்கமுடியாமல் இருதியில் 1.37 சதவீதம் குறைந்து ரூ.814.80-இல் நிலைபெற்றுள்ளது. எல்ஐசி பங்குகள் ரூ.800 என்ற அளவில் நல்ல ஆதரவு பெறும் என்றும் நீண்டகால முதலீட்டுக்கு நன்றாக இருக்கும் என்று வல்லுநா்கள் தெரிவிப்பதாக சிறப்புச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT