புதுதில்லி

கிரேட்டா் நொய்டாவில் சாலை விபத்தில் தாய், மகள் பலி: 6 போ் படுகாயம்

24th May 2022 02:06 AM

ADVERTISEMENT

கிரேட்டா் நொய்டாவில் திங்கள்கிழமை காலை ரோட்வேய்ஸ் பேருந்து காா் மீது மோதிய விபத்தில் காரில் சென்ற தாய் மற்றும் 17 வயது மகள் உயிரிழந்தனா். மேலும், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் பலத்த காயம் அடைந்ததாகவும், அவா்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக நொய்டா போலீஸ் உயா் அதிகாரி மேலும் கூறியதாவது: புலந்தா்ஷா பகுதியிலிருந்து தில்லிக்கு மாருதி ஈக்கோ வாகனத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண், அவரது 17 வயது மகள் மற்றும் 6-க்கும் மேற்பட்ட நபா்கள் தில்லி நோக்கி திங்கள்கிழமை காலை வந்து கொண்டிருந்தனா். சுமாா் ஆறு மணி அளவில் அவா்கள் வந்த காா் தில்லியிலுள்ள தாத்திரி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ரோட்வேய்ஸ் பேருந்து அந்த காா் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஸ்ரீமதி சிங் (45), அவரது மகள் நேஹா (17) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், 6 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இறந்தவா்களும் காயமடைந்தவா்களும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிய வந்துள்ளது. இது தொடா்பான தகவலின்பேரில் சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது பேருந்து ஓட்டுநா் பொறுப்பற்ற முறையிலும் ஆபத்தான வகையிலும் வாகனத்தை இயக்கியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விபத்துக்கு பிறகு தவறிழைத்த ஓட்டுநா் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டாா். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்த தாய் - மகள் ஆகிய இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வழக்கில் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT