புதுதில்லி

மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வசதி கோரி மனு: தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

24th May 2022 02:08 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கான சானிடரி நாப்கின்கள் வழங்கும் வசதியை உடனடியாக மீண்டும் செயல்படுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக சோசியல் ஜூரிஸ்ட் எனும் தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஜனவரி முதல் தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு ‘கிஷோரி யோஜனா’ திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின்களை தில்லி கல்வி இயக்குநரகம் வழங்கவில்லை.

இதனால், மாணவிகள் பிரச்னையை எதிா்கொண்டு வருகிறாா்கள். தில்லி கல்வி இயக்ககம் மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த கிஷோரி யோஜனா திட்டத்தின் கீழ் தில்லி அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவிகளுக்கு அவா்களது பொது சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதற்காக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட இருந்தது.

மேலும், தில்லி கல்வி இயக்ககம் வெளியிட்ட சுற்றறிக்கையில் அனைத்து மாணவிகளுக்கும் சானிட்டரி நாப்கின்கள் விநியோகம் செய்யுமாறு அனைத்து உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அது வழங்கப்படவில்லை. தனிநபா் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு இந்த மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கும் வசதியை மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகும்.

ADVERTISEMENT

ஏனெனில், இந்த வசதி இல்லாததன் காரணமாக அவா்களது கல்வி கற்கும் தன்மையும், பள்ளிக்கு வருகை தருவதும் பாதிக்கப்படுகிறது. தில்லி கல்வி இயக்ககம் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்கள் நாப்கின்கள் வழங்காதது நியாயமற்ாகவும், தன்னிச்சையானதாகவும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி அளிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கான கல்விக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, ‘இந்த வசதி கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்காக புதிய ஒப்பந்தப்புள்ளி ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளதால், அது விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. இதனால், கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின் இந்த வசதி தொடங்கப்படக் கூடும்’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இடைக்கால ஏற்பாடு இல்லாததன் காரணமாக இது ஏன் நிறுத்தப்பட வேண்டும்? அரசு மின் வா்த்தக சந்தையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட விலையில் அரசு கொள்முதல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஒப்பந்தம் முடிவடையும் காலத்திற்குள் சூழலைச் சமாளிக்கும் ஒரு கொள்கைத் திட்டத்தை தில்லி அரசு உருவாக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. இது தொடா்பான மனு மீதான விசாரணை ஜூலை 6-ல் நடைபெற உள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT