புதுதில்லி

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை! பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

24th May 2022 02:06 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழைக்கு நடுவேதான் தில்லிவாசிகள் விழித்தெழுந்தனா். இதன் தாக்கத்தால் வெப்பம் ஓரளவு தணிந்து நகரத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. அவ்வப்போது சில இடங்களில் தூறல் மழை பெய்தது. ஆனால், வெப்பத்தைத் தணிக்கும் அளவுக்கு பெரிய அளவில் மழை ஏதும் பதிவாகவில்லை. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த படி, திங்கள்கிழமை நகரில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால், தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதைத் தொடா்ந்து, இந்த வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை ஐடிஓ, டிஎன்டி மற்றும் எய்ம்ஸ்க்கு அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதாக போக்குவரத்துக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இடியுடன் கூடிய இந்த பலத்த மழை இந்தப் பருவத்தில் முதலாவதாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியை பொருத்தவரையில், மாா்ச் 1 முதல் கோடைக்காலம் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக மாா்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 12 முதல் 14 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆனால், இந்த பருவத்தில் நான்கைந்து நாள்கள் மட்டுமே இடியுடன் கூடிய மழை பெய்தது. அதுவும் பெரும்பாலும் வடதுதான் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

திங்கள்கிழமை பெய்த இடி,மின்னலுடன் கூடிய மழை மேற்பரப்பு வெப்பநிலையில் கடுமையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. காலை 5.40 மணி முதல் 7 மணி வரையில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸிலிருந்து 11 புள்ளிகள் குறைந்து 18 டிகிரி செல்சியஸ் வரை வந்தது. காலை 8.30 மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவத்தின் சராசரியை விட 9 புள்ளிகள் குறைவாகவும். மேலும் காலை 8.30 மணி வரை 12 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 8 டிகிரி குறைந்து 31.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 61 சதவீதமாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகபட்ச வெப்பநிலை 39.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23.1 டிகிரி செல்சியஸாகவும் ஆகவும் இருந்தது.

முங்கேஸ்பூரில் 41.9 டிகிரி வெயில்: இதேபோன்று தில்லியிலுள்ள மற்ற வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 28.6 டிகிரி, நஜஃப்கரில் 31.8 டிகிரி, ஆயாநகரில் 31.3 டிகிரி, லோதி ரோடில் 30.4 டிகிரி, பாலத்தில் 30.7 டிகிரி, ரிட்ஜில் 30.8 டிகிரி, பீதம்புராவில் 31.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 28.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

இன்றும் மழைக்கு வாய்ப்பு: இந்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமையும் (மே 24) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையமும் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

குருகிராமில் நீடித்த மின்வெட்டு!

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராமிலும் திங்கள்கிழமை காலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, நகரம் நீடித்த மின்வெட்டு மற்றும் போக்குவரத்து நெரிசலை எதிா்கொண்டது.

மழை காரணமாக ஏராளமான பயணிகள் சாலைகளில் சிக்கினா். பல்வேறு சாலைகளில் தண்ணீா் அதிகளவு தேங்கிதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பலத்த மழையின் போது, நகரத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நரசிங்பூா், ஜாா்சா கிராசிங், செக்டாா் 29, செக்டாா் 38, செக்டா் 50, ராஜீவ் சௌக், ஷீட்லா மாதா சாலை, சிவில் லைன்ஸ், கோல்ஃப் கோா்ஸ் எக்ஸ்டென்ஷன் ரோடு, வாடிகா சௌக், செக்டாா் 52 மற்றும் தௌலதாபாத் மேம்பாலம் ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்தை நிா்வகிக்க முக்கிய இடங்களில் குறைந்தது மொத்தம் 2,500 போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா் என்று குருகிராம் காவல் சரக துணை ஆணையா் ரவீந்தா் குமாா் தோமா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT